தேர்தல் தோல்வி எதிரொலி; பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்ட நிலையில், மாநில அரசின் வரி மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

லடாக், புதுச்சேரி உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.7 ரூபாய் குறைப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 9.52 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கலால் வரியானது மத்திய அரசால் குறைக்கப்பட்ட நிலையில், மதிப்பு கூட்டு வரியை மாநில அரசு குறைத்துள்ளது.

தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில், புதன்கிழமையன்று, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. டீசல் மீதான கலால் வரி 10 ரூபாய் குறைக்கப்பட்டது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, எரிபொருள் விலை உச்சம் தொட்டதை தொடர்ந்து, வரிகுறைப்பு மக்களுக்கு நிம்மதி பெருமூச்சு அளித்தது.

இதையடுத்து, 22 மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளது. இதன் காரணமாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளாத மாநிலங்களை காட்டிலும் மற்ற மாநிலங்களான மகாராஷ்டிரா, தில்லி மேற்குவங்கம் உள்ளிட்டவற்றில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக, உத்தரகண்டில் பெட்ரோல் விலை மேலும் 1.97 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. லடாக்கில் மேலும் 8.70 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், உத்தரகண்டில் டீசல் லிட்டருக்கு 17.5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. லடாக்கில் 9.52 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, புதுச்சேரி, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, அசாம், சிக்கிம், பிகார், மத்தியப் பிரதேசம், கோவா, குஜராத், தாத்ரா & நாகர் ஹவேலி, டாமன் & டையூ, சண்டிகர், ஹரியாணா, இமாச்சல் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், உத்தரகண்ட் உத்தரபிரதேசம், லடாக் உள்ளிட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்படவில்லை.

ஆம் ஆத்மி ஆளும் தில்லி, திரிணமூல் ஆளும் மேற்கு வங்கம், இடதுசாரிகள் ஆளும் கேரளம், பிஜு ஜனதா தளம் ஆளும் ஒடிசா, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆளும் தெலங்கானா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆளும் ஆந்திரப் பிரதேசத்திலும் மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com