பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி: ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு பத்ம விபூஷண் விருது

கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி புது தில்லியில் இரண்டு நிகழ்வுகளாக நடைபெறுகிறது.
பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி: ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு பத்ம விபூஷண் விருது
பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி: ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு பத்ம விபூஷண் விருது

கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி புது தில்லியில் இரண்டு நிகழ்வுகளாக நடைபெறுகிறது. இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார்.

கரோனா பேரிடர் காரணமாக, கடந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2020 ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 7 பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார்.

கலை, சமூகப் பணி, பொதுநலன், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, வா்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணிகள் என பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்கள், உயரிய பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற பத்ம விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது இந்த விருதுகள் அறிவிக்கப்படும். பின்னா், தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் மாா்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில், 2020ஆம் ஆண்டு 141 பேருக்கும், 2021-ஆம் ஆண்டில் 119 பேருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

2020ஆம் ஆண்டு அறிவித்தபடி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், கர்நாடகத்திலுள்ள பெஜாவர் மடத்தின் மறைந்த மடாதிபதி விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சார்பில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விருதுகளை பெற்றுக் கொண்டனர். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் சார்பில் அவரது மனைவியும், சுஷ்மா சுவராஜ் சார்பில் அவரது மகளும் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளைப் பெற்றோர்..

மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷண் விருதும், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட 119 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் பத்மபூஷண் விருது பெற்றுள்ளனர்.

கர்நாடக இசைக் கலைஞர்களான லலிதா சிதம்பரம் மற்றும் சரோஜா சிதம்பரம், ஓவியர் மனோகர் தேவதாஸ், சமூக சேவகர் எஸ்.ராமகிருஷ்ணன், நாகஸ்வர இசைக் கலைஞர்கள் காலீஷாபி மெஹபூப் மற்றும் ஷேக் மெஹபூப் சுபானி, சென்னை ஐஐடியின் விரிவுரையாளர் பிரதீப் தலப்பில் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றனர்.

அத்துடன், புதுச்சேரியைச் சேர்ந்த இலக்கியவாதி மனோஜ் தாஸுக்கு பத்மபூஷண் விருதும், டெரகோட்டா சிலை வடிக்கும் கலைஞர் முனுசாமி கிருஷ்ணபக்தருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

2020-ஆம் ஆண்டு மொத்தமாக 141 பத்ம விருதுகள்  இன்று குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 பத்மவிபூஷண் விருதுகளும், 16 பத்மபூஷண் விருதுகளும், 118 பத்மஸ்ரீ விருதுகளும் அடங்கும். 

2020-ல், விருது பெறுவோரில் 34 பேர் பெண்களாவர். வெளிநாட்டவர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் 18 பேருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இறப்புக்குப் பிறகான விருது 12 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பத்மவிபூஷண்: மோரீஷஸ் முன்னாள் பிரதமர் அனிருத் ஜெகந்நாத், பாடகர் சன்னுலால் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேருக்கு பத்மவிபூஷண் வழங்கப்பட்டுள்ளது.

பத்மபூஷண்: மத போதகர் மும்தாஸ் அலி, மறைந்த வங்கதேச தூதர் சையது முவாஸெம் அலி, பாடகர் அஜய் சக்ரவர்த்தி, சமூக சேவகர் அனில் பிரகாஷ் ஜோஷி உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ: பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், மருத்துவர் பத்மாவதி பந்தோபாத்யாய, பாடகர் அட்னான் சமி, தொழிலதிபர் பரத் கோயங்கா உள்ளிட்ட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com