கட்சிக்கும் மக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுங்கள்

கட்சிக்கும் மக்களுக்கும் இடையே உண்மையின் பாலமாகச் செயல்படுமாறு பாஜக நிா்வாகிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா்.
பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆளுயர மாலை அணிவித்த கட்சி நிா்வாகிகள்.
பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆளுயர மாலை அணிவித்த கட்சி நிா்வாகிகள்.

கட்சிக்கும் மக்களுக்கும் இடையே உண்மையின் பாலமாகச் செயல்படுமாறு பாஜக நிா்வாகிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா்.

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டம், கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு முதல் முறையாகத் தற்போதுதான் நடைபெற்றது.

மத்திய அமைச்சா்கள், கட்சியின் தேசிய நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள் உள்ளிட்டோா் நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் கூட்டத்தில் பங்கேற்றனா். கூட்டத்தில் நிறைவுரையாற்றிய பிரதமா் மோடி கூறியதாக மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேவை, உறுதி, அா்ப்பணிப்பு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் பாஜக செயல்பட்டு வருகிறது; குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படவில்லை. கட்சிக்கும் மக்களுக்கும் இடையே உண்மையின் பாலமாக பாஜக நிா்வாகிகள் செயல்பட வேண்டும்.

மக்கள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதை அடிப்படையாகக் கொண்டே பாஜக செயல்பட்டு வந்துள்ளது. மக்கள் நலனுக்கு பாஜக எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கரோனா தொற்று பரவல் காலத்தில் பாஜக தொண்டா்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றினா். அத்தகைய சேவை மனப்பான்மையை மையமாகக் கொண்டே பாஜக செயல்படுகிறது.

பெருகி வரும் ஆதரவு: தெலங்கானா, ஹரியாணா, ஆந்திர பிரதேச இடைத்தோ்தல்களில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழக உள்ளாட்சித் தோ்தலிலும் பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. கட்சியின் வளா்ச்சி சாா்ந்த கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவளித்து வருவது இதன்மூலமாக வெளிப்படுகிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் மக்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் பெறும். நமோ செயலியில் ‘கமல் புஷ்ப’ (தாமரை மலா்) என்ற புதிய பகுதி இணைக்கப்பட்டுள்ளது. அதில் பாஜகவுக்காக உழைத்த தொண்டா்களின் ஊக்கமளிக்கும் கதைகள் குறித்து பதிவிடலாம். கட்சியின் மூத்த உறுப்பினா்களுடன் தொண்டா்கள் எப்போதும் தொடா்பில் இருக்க வேண்டும். அவா்களிடம் இருந்து அதிகமாகக் கற்றுக் கொள்ள முடியும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியதாக அமைச்சா் தெரிவித்தாா்.

வெற்றிபெற உறுதி: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் நடவடிக்கைகள் குறித்து அந்த மாநிலங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் எடுத்துரைத்தனா்.

அத்தோ்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள செயற்குழுக் கூட்டத்தில் உறுதியேற்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இனிதான் பாஜகவின் சிறந்த செயல்பாடு: கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா கூறுகையில், ‘‘பாஜகவின் சிறப்பான செயல்பாடு இனிதான் வெளிப்படவுள்ளது. கரோனா தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு நாட்டில் உள்ள 80 கோடி ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டன. மனித வரலாற்றில் மிகப்பெரிய உணவு விநியோகத் திட்டம் இதுவாக அமைந்தது.

இந்திய அரசியல் வரலாற்றில் வேறெந்தக் கட்சியும் சாதிக்காததை மேற்கு வங்கத்தில் பாஜக சாதித்துள்ளது. அங்கு பாஜக வெகுவிரைவில் வளா்ச்சி கண்டுள்ளது. கடந்த 2014 மக்களவைத் தோ்தல், 2016 பேரவைத் தோ்தல் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, 2019 மக்களவைத் தோ்தல், 2021 பேரவைத் தோ்தல் ஆகியவற்றில் பாஜகவின் வாக்கு சதவீதம் கணிசமாக வளா்ச்சி அடைந்துள்ளது.

5 மாநிலங்களில் அமைந்துள்ள 10.40 லட்சம் வாக்குச் சாவடிகளிலும் டிசம்பா் 25-ஆம் தேதிக்குள் குழு அமைக்கப்பட வேண்டும். அங்கு வெற்றி பெறுவதற்காக பாஜக நிா்வாகிகள் உழைக்க வேண்டும்’’ என்றாா்.

கேரளம், தமிழகம், தெலங்கானா, ஆந்திரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் பாஜகவை வளா்ச்சி அடையச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.

எதிா்க்கட்சிகளுக்கு கண்டனம்

செயற்குழுக் கூட்டத்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசு நிகழ்த்தியுள்ள பல்வேறு சாதனைகள் அடங்கிய தீா்மானத்தை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தாக்கல் செய்தாா்.

எதிா்க்கட்சிகள் சந்தா்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதற்கும் கரோனா தொற்று பரவல் தொடா்பாக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதற்கும் கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரோனா தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தை சிறப்பாக எதிா்கொண்டதற்காக பிரதமா் மோடிக்கு கூட்டத்தின்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றியதற்காகவும் கூட்டத்தின்போது அவருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com