எல்லையில் ஹெலிகாப்டர் இறங்குதளங்களை கட்டிவரும் சீனா: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

எல்லையின் மறுபுறம் பிரமாண்டமான ஹெலிபேடுகள் மற்றும் கட்டிடங்களைச் சீனா கட்டி வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உத்தரகண்ட் மாநிலம் இமயமலையில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் 899 கிமீ நீளமுள்ள சார் தாம் நெடுஞ்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017இல் தொடங்கியது.

எல்லையில் அமையும் மிக முக்கிய சாலை திட்டங்களில் ஒன்றான இதை மத்திய அரசு டேராடூன் வரை விராவக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே நிலச்சரிவுகள் அதிகரித்து வரும் சூழலில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் நிலைமை மேலும் மோசமாகும் எனக் கூறி இதை எதிர்த்து தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

முதலில் 5 மீட்டர் அகலமுள்ள சாலைகளை மட்டுமே அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், 10 மீட்டர் அகலமுள்ள சாலைகளை அமைக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தது. 

இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் கே. கே. வேணுகோபால், "அங்கு எல்லையின் மறுபுறம் சீனா அதிகளவில் தனது வீரர்களைக் குவித்து வருகிறது. பிரமாண்டமான ஹெலிபேடுகள் மற்றும் கட்டிடங்களைச் சீனா கட்டி வருகிறது.  

எனவே அகலமான இந்த சாலைகள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. சீனாவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பீரங்கி, ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் டாங்கிகளை ஏற்றிச் செல்லும் டிரக்குகள் செல்லக்கூடிய வகையில் இந்த சாலைகள் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அந்த தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், "இப்பகுதியில் இந்த ஆண்டு அதிகளவில் மலைச்சரிவு ஏற்பட்டுள்ளன. இது மலைப்பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழல் தேவைகளுக்காகத் தேசத்தின் பாதுகாப்பிற்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என நான் சொல்லவில்லை. 

ஆனால் இதுபோன்ற அகலமான சாலைகள் தான் எங்களுக்கு வேண்டும் என்று ராணுவம் ஒருபோதும் கூறவில்லை. அரசின் விருப்பத்தின் பெயரிலேயே இந்த அகலமான சாலைகள் போடப்படுகிறது. 2013இல் இங்கு ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் 24 திட்டங்களுக்குத் தடை விதித்தது. 

இமயமலையில் 17 நீர்மின் திட்டங்கள் உள்ளன. இதுபோன்ற திட்டங்கள் மேக வெடிப்பு ஏற்படும் சமயங்களில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்" என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், "1962இல் ஏற்பட்டதைப் போல மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதே எங்கள் விருப்பம்" எனக் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு, "பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டும் ஒரே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் எங்களுக்கு சில சிக்கல்கள் உள்ளன. மத்திய அரசு சுற்றுலாவை மேம்படுத்த இதைச் செய்வதாகக் கூறியிருந்தால் நாங்கள் கடும் நிபந்தனைகளை விதித்திருப்போம். 

ஆனால், அவர்கள் எல்லை பாதுகாப்பிற்கு எனச் சொல்கிறார்கள். இது இக்கட்டான சூழ்நிலையாகும். இதில் மிகவும் நுணுக்கமாக இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் தேச பாதுகாப்பு முக்கியமானது என்பதை நம்மால் மறுக்க முடியாது. அதேநேரம் சமீப காலங்களாகப் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளைக் கண்ட பிறகும் சுற்றுச்சூழலைக் காட்டிலும் தேச பாதுகாப்பு முக்கியமானது எனக் கூற முடியாது. 

வளர்ச்சி என்ற பெயரில் எவ்வித பாதிப்பையும் கருத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் பணிகள் காரணமாகவே பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே முடிவுகளை எடுக்க வேண்டும்" என்றார்.

மேலும், இமயமலையின் மறுபுறம் சீனா எடுத்து வரும் நடவடிக்கைகளால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் எதாவது உள்ளதா என்று மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அக்கறை இல்லாத அரசாகவே சீனா உள்ளதாகத் தெரிவித்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், இது குறித்து முடிந்த வரை தகவல்களைத் திரட்டி வருவதாகப் பதிலளித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com