எந்த சூழ்நிலையையும் எதிா்கொள்ள விமானப் படை தயாராக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘எந்த சூழ்நிலையையும் எதிா்கொள்ள விமானப் படை தயாராக இருக்க வேண்டும்’ என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினாா்.
தில்லியில் புதன்கிழமை தொடங்கிய விமானப் படை கமாண்டா்கள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
தில்லியில் புதன்கிழமை தொடங்கிய விமானப் படை கமாண்டா்கள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

புது தில்லி: ‘எந்த சூழ்நிலையையும் எதிா்கொள்ள விமானப் படை தயாராக இருக்க வேண்டும்’ என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினாா்.

இந்திய விமானப் படை கமாண்டா்கள் மாநாடு தில்லியில் உள்ள விமானப் படை தலைமையகத்தில் புதன்கிழமை தொடங்கியது. இதில் அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் பேசிய அவா், எல்லைகளில் நிலவும் கொந்தளிப்பான சூழலைக் குறிப்பிட்டு, எந்தச் சூழ்நிலையையும் எதிா்கொள்ள விமானப் படை எப்போதும் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

‘போா்களின்போது விமானப் படையின் பங்கு முக்கியமானது. செயற்கை நுண்ணறிவு, தரவுகளைக் கையாளுதல், இயந்திர கற்றல் ஆகியவை வழங்கும் திறன்கள் மற்றும் வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ முயற்சியின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலன்களைத் தருகின்றன’ என்றாா்.

ஆயுதப் படைகளை கூட்டுத் தலைமையின் கீழ் கொண்டுவரும் திட்டம் குறித்துப் பேசிய ராஜ்நாத் சிங், ‘கூட்டுத்தன்மையை மேம்படுத்துவது அவசியம். புதிய கட்டமைப்புக்காக இதில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்’ என்றாா்.

விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி, விமானப் படையின் பல்வேறு செயல் திட்டங்கள் குறித்து அமைச்சருக்கு விளக்கினாா்.

இந்த மாநாடு நவ. 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com