77.8 சதவிகிதம் செயல்திறன், மோசமான பின்விளைவுகள் இல்லை; கோவேக்சின் தடுப்பூசி குறித்து லான்செட் ஆய்வில் தகவல்

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியின் செயல் திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த இடைக்கால ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி அறிகுறிகள் தென்படும் கரோனாவுக்கு எதிராக 77.8 சதவிகிதம் பலனளிக்கிறது என தி லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில், மிக அபாயகரமான டெல்டா கரோனாவுக்கு எதிராக கோவேக்சின் 65.2 சதவிகிதம் பலன் அளிக்கிறது என்றும் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளை உறுதிப்படுத்த அடுத்தக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் லான்செட் தெரிவித்துள்ளது. செயலற்ற வைரஸை கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது விஞ்ஞான உலகில் வழக்கமான நடைமுறை.

இந்த முறையை அடிப்படையாக கொண்டு, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டு வாரங்களான பிறகு, வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை கோவேக்சின் வெளியிடுகிறது என ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 24,419 தன்னார்வலர்களை ஈடுப்படுத்தப்பட்ட ஆய்வில், தடுப்பூசி செலுத்தியதால் தீவிரமான பாதிப்புக்குளாகி எவரும் உயிரிழக்கவில்லை என்றும் மோசமான பின்விளைவுகள் எவருக்கும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 நவம்பர் தொடங்கி 2021 மே வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 லிருந்து 97 வரையிலான வயதுடையவர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆய்வு முடிவுகள் குறித்து வெளியான அறிக்கையில், "இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு 14 நாட்களுக்குப் பிறகு கோவிட்-19 இன் தீவிரத்தன்மைக்கு எதிரான செயல்திறன் 77.8 சதவீதமாக இருந்தது. டெல்டா கரோனாவுக்கு எதிராக 65.2 சதவீத செயல்திறன் இருப்பது எங்கள் முதற்கட்ட பகுப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த மருத்துவ செயல்திறனை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் அவசியம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்த இரண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள குழுவில் இருந்துள்ளனர்.

ஜனவரி மாதத்தில், கோவேக்சினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டபோது, அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. தடுப்பூசி தரம் குறித்து பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்தன. இதையடுத்து, கோவேக்சின் குறித்த ஆய்வு வெளியிடப்பட்டன. முன்னதாக வெளியிடப்பட்ட முடிவுகள் தெரிவித்த கருத்துகளை இந்த முடிவுகளும் கூறுகின்றன.

கோவேக்சின் தடுப்பூசியின் இறுதி கட்ட ஆய்வுகள் முடிவதற்கு முன்பாகவே, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் காரணமாக, அதை செலுத்திக் கொள்வதில் மக்களிடையே அச்சம் நிலவியது. அப்போதிலிருந்து இப்போது வரை, 100 மில்லியன் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டன. இதற்கு மத்தியில், கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு கோவேக்சினுக்கு ஒப்புதல் வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com