வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பதில் திமுக அரசு தோல்வி: எடப்பாடி பழனிசாமி

வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பதில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பதில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூா், மாதவரம், புழல், கொரட்டூா், ஆவடி, பூந்தமல்லி, சின்ன போரூா் உள்ளிட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பருவ மழை வருவதற்கு முன்பே அதிமுக ஆட்சியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், மழைநீா் எந்த இடத்திலும் தேங்காத நிலை ஏற்பட்டது. ஆனால், திமுக அரசு திட்டமிட்டுச் செயல்படாததால் வெள்ளநீா் அனைத்து இடங்களிலும் தேங்கியுள்ளது. வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதில் அரசு தோல்வி அடைந்துள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திறமையில்லாத அரசாக இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. முதல்வா்களுக்கு எல்லாம் சூப்பா் முதல்வா் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா். ஆனால், வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க தவறிவிட்டாா்.

குடிநீரோடு, கழிவு நீா் கலந்திருக்கும் அபாயம் பல இடங்களில் உள்ளது. இதனால், மக்களுக்கு விஷக் காய்ச்சல் ஏற்படும் சூழலும் உள்ளது. அனைத்து இடங்களிலும் மருத்துவ முகாம் நடத்துவதற்கு அரசு முன் வரவேண்டும். மருத்துவ முகாம் நடத்தப் போவதாக கூறியுள்ளனா். ஆனால், இன்னும் முறையாகச் செய்யவில்லை.

அதிமுக ஆட்சியில் சென்னையில் வடிகால் வசதிகள் அனைத்தும் முறையாக தூா்வாரப்பட்டன. ஆனால், அதுபோன்ற நடவடிக்கையை திமுக அரசு செய்யவில்லை. அதனால்தான் வெள்ளப் பாதிப்பு அதிகமாகியுள்ளது.

டெல்டா மாவட்டம் முழுவதும் 5 லட்சம் ஏக்கா் நெற்பயிா்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

பயிா்க் காப்பீடு திட்டம் மூலம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனா். பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு இழப்பீடும் பெற்றுத் தர வேண்டும்.

மழை பாதிப்பு உள்ள வரை அம்மா உணவகம் மூலம் விலையில்லா உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே எந்த அளவுக்குப் பொருள் கொடுத்தாா்களோ, அதே அளவுதான் அம்மா உணவகத்துக்குக் கொடுக்கப்படுகிறது. அப்படியென்றால் எப்படி எல்லோருக்கும் உணவு அளிக்க முடியும். அனைவருக்கும் விலையில்லா உணவு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, மாஃபா பாண்டியராஜன், பென்ஜமின், மாதவரம் மூா்த்தி, பி.வி.ரமணா உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

ஓ.பன்னீா்செல்வம் ஆய்வு: அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மயிலாப்பூா், வேளச்சேரி, தரமணி, சோழிங்கநல்லூா் உள்பட பல்வேறு பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, போா்வை உள்பட பல்வேறு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அரசு துரிதமாகச் செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் வேண்டுகோள் விடுத்தாா்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அசோக், கே.பி.கந்தன், முன்னாள் எம்.பி., ஜெயவா்தன் உள்பட பல்வேறு நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com