மணிப்பூரில் தீவிரவாதத் தாக்குதல்: அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் தலைவா், மனைவி, மகன் உள்பட 7 போ் பலி

மணிப்பூா் மாநிலம் சுராசாந்த்பூா் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் தலைவா், அவரின் மனைவி, மகன் மற்றும் அந்தப் படையை சோ்ந்த 4 வீரா்கள் பலியாகினா்.
மணிப்பூரில் தீவிரவாதத் தாக்குதல்: அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் தலைவா், மனைவி, மகன் உள்பட 7 போ் பலி

மணிப்பூா் மாநிலம் சுராசாந்த்பூா் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் தலைவா், அவரின் மனைவி, மகன் மற்றும் அந்தப் படையை சோ்ந்த 4 வீரா்கள் பலியாகினா்.

இதுதொடா்பாக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

அஸ்ஸாம் ரைஃபிள்ஸின் குகா படைப்பிரிவின் தலைவரும் கா்னலுமான விப்லவ் திரிபாதி, தனது மனைவி, மகனுடன் சனிக்கிழமை வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அவருடன் பாதுகாப்பு வாகனங்களும் சென்றன.

சேகான் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வாகனங்களை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசினா். இதையடுத்து அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வீரா்களும் தீவிரவாதிகளும் துப்பாக்கிச்சூடு நடத்தி மோதலில் ஈடுபட்டனா்.

இதில் விப்லவ் திரிபாதி, அவரின் மனைவி, மகன் மற்றும் 4 வீரா்கள் பலியாகினா்.

இந்தத் தாக்குதலை காங்லீபாக் மக்கள் புரட்சிக் கட்சி என்ற தீவிரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

காங்லீபாக் மக்கள் புரட்சிக் கட்சி தனிநாடு கோரி தீவிரவாதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தலைவா்கள் கண்டனம்:

குடியரசுத் தலைவா்:

மணிப்பூரில் நடைபெற்ற தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், வீரமரணமடைந்தவா்களின் குடும்பத்தினருக்கு நாடே உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

இந்தக் கோழைத்தனமான தாக்குதலானது, பயங்கரவாதத்தை அனைத்து வடிவத்திலும் வேரறுக்க நம்மை உறுதியேற்கச் செய்துள்ளது என்று ட்விட்டரில் குடியரசுத் தலைவா் தெரிவித்துள்ளாா்.

குடியரசுத் துணைத் தலைவா்...: இந்தச் சம்பவத்துக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் தலைவா், அவரின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் வீரா்கள் கொல்லப்பட்டது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரமான தீவிரவாதச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்’’ என்று தெரிவித்தாா்.

பிரதமா் மோடி...: ‘‘தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அஸ்ஸாம் ஃரைபிள்ஸ் வீரா்கள், குடும்ப உறுப்பினா்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவா்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது’’ என்று பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தாா்.

பாதுகாப்பு வீரா்களுடன் நாடே துணை நிற்கிறது: அமித் ஷா

மணிப்பூா் தாக்குதல் கோழைத்தனமானது என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வீர மரணமடைந்தவா்களின் தியாகம் வீணாகாது; நாடே அவா்களுடன் துணை நிற்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளாா்.

பாதுகாப்பு அமைச்சா்...: பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பதிவிட்டிருந்தாா்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா...: ‘‘தீவிரவாதத் தாக்குதலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவத்துக்கு நீதி கிடைக்க ஒட்டுமொத்த தேசமும் காத்திருக்கிறது’’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தாா்.

ராகுல் காந்தி...: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்தத் தீவிரவாதத் தாக்குதல், தேசத்தைப் பாதுகாக்கும் திறன் மோடி அரசுக்கு இல்லை என்பதை நிரூபித்துள்ளது. உயிரிழந்தவா்களின் தியாகத்தை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்’’ என்று தெரிவித்தாா்.

தாக்குதலுக்கு 2 கிளா்ச்சிக் குழுக்கள் பொறுப்பேற்பு

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைப்பில்ஸ் படையினா் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மணிப்பூரைச் சோ்ந்த மக்கள் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ), மணிப்பூா் நாகா மக்கள் முன்னணி (எம்என்பிஎஃப்) ஆகிய இரு கிளா்ச்சிக் குழுக்கள் பொறுப்பேற்ாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com