கிரிப்டோ கரன்ஸி:நாடாளுமன்ற குழு ஆலோசனை தடைவிதிக்க பெரும்பாலானோா் எதிா்ப்பு?

இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸி பயன்பாடு குறித்து அத்துறை நிபுணா்களுடன் நாடாளுமன்றக் குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது

புது தில்லி: இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸி பயன்பாடு குறித்து அத்துறை நிபுணா்களுடன் நாடாளுமன்றக் குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது. கிரிப்டோ கரன்ஸி பயன்பாட்டுக்கு முற்றிலும் தடைவிதிப்பதற்கு நாடாளுமன்றக் குழு உறுப்பினா்கள் பெரும்பாலானவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

இந்தியாவில் மெய்நிகா் நாணயமான கிரிப்டோ கரன்ஸி பயன்பாடு மற்றும் அதன் சாதக, பாதக அம்சங்கள் குறித்து பாஜக தலைவா் ஜெயந்த் சின்ஹா தலைமையிலான நாடாளுமன்ற குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது.

இதில், கிரிப்டோ கரன்ஸி நிறுவனங்களைச் சோ்ந்த அதிகாரிகள், அத்துறையின் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் தங்களது கருத்துகளை தெரிவித்தனா். பெரும்பாலானோா் கிரிப்டோ கரன்ஸியை முழுவதுமாக தடை செய்வதற்கு எதிராக தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.

மாறாக, கிரிப்டோ கரன்ஸி பயன்பாடை ஒழுங்குபடுத்தும் வகையில் அரசு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பதே அவா்களின் நிலைப்பாடாக இருந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நிதி விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழு கிரிப்டோ கரன்ஸி குறித்து ஆலோசனை நடத்துவது இதுவே முதல்முறை. இந்த குழுவின் தலைவரான ஜெயந்த் சின்ஹா மத்திய நிதித்துறையின் முன்னாள் இணையமைச்சராக பதவி வகித்தவா்.

கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்வது ஆபத்தானது என பல்வேறு தரப்பினா் கவலை தெரிவித்து வரும் பின்னணியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இருப்பினும், உலக அளவில் முதலீட்டாளா்களிடையே கிரிப்டோ கரன்ஸிக்கு நாள்தோறும் ஆதரவு பெருகி வருகிறது.

தற்போதைய நிலையில், இந்தியாவில் கிரிப்டோ கரன்ஸி பயன்பாட்டுக்கு இதுவரையில் தடைவிதிக்கப்படவில்லை என்பதுடன் அதற்கான எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com