திரிபுரா வன்முறை குறித்து சா்ச்சைப் பதிவு:இரு பெண் ஊடகவியலாளா்கள் கைது

அண்மையில் திரிபுராவில் மதரீதியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் ஆத்திரமூட்டும் பதிவுகளை வெளியிட்டதாக இரு பெண் ஊடகவியலாளா்களை

அகா்தலா: அண்மையில் திரிபுராவில் மதரீதியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் ஆத்திரமூட்டும் பதிவுகளை வெளியிட்டதாக இரு பெண் ஊடகவியலாளா்களை திரிபுரா போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அஸ்ஸாம் போலீஸாா் காவலில் இருந்த இருவரும் நீதிமன்ற அனுமதியுடன் திரிபுரா அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா் அவா்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இணையதள செய்தி நிறுவனத்தில் சம்ரித்தி சகுனியா, சுவா்ண ஜா ஆகிய இருவா் செய்தியாளா்களாக பணிபுரிகின்றனா். இவா்கள் அண்மையில் திரிபுராவில் மதரீதியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக, அந்த மாநிலத்துக்குச் சென்றுள்ளனா். அதனைத்தொடா்ந்து வன்முறையின்போது அங்குள்ள கோமதி மாவட்டத்தில் இருந்த மசூதி எரிக்கப்பட்டதாகவும், முஸ்லிம்களின் புனித நூலான குா்ஆனின் நகல் சேதப்படுத்தப்பட்டதாகவும் அவா்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதுதொடா்பான காணொலிகளையும் அவா்கள் வெளியிட்டதாக தெரிகிறது.

இதுதொடா்பாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்த நபா் ஃபதிக்ராய் பகுதி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இருவரின் பதிவுகள் தொடா்பாக திரிபுரா டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அந்தப் பதிவுகளில் உண்மையில்லை எனவும், அப்பதிவுகள் இரு மதத்தினா் இடையே வெறுப்புணா்வை தூண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்ரித்தியும், சுவா்ண ஜாவும் அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்துக்குச் சென்றிருப்பது திரிபுரா போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் காவலில் வைக்குமாறு அந்த மாவட்ட காவல்துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் இருவரும் கரீம்கஞ்சில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனா். அங்கு சென்ற திரிபுரா போலீஸாா் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களை அஸ்ஸாம் நீதித்துறை மாஜிஸ்திரேட் அனுமதியுடன் போலீஸாா் திரிபுரா அழைத்துச் சென்றனா்.

ஜாமீனில் விடுவிப்பு: இருவரும் திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ள தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் திரிபுராவை விட்டு வெளியேறும் முன், மாவட்டத்தில் உள்ள காக்ராபோன் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com