பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு: இந்தியா, ரஷியா திட்டம்

இந்தியா, ரஷியா இடையேயான உச்சி மாநாட்டின்போது இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை (2+2) அமைச்சர்கள் மாநாட்டை நடத்த இரு நாடுகளும் ஆலோசித்து வருகின்றன.


புது தில்லி: இந்தியா, ரஷியா இடையேயான உச்சி மாநாட்டின்போது இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை (2+2) அமைச்சர்கள் மாநாட்டை நடத்த இரு நாடுகளும் ஆலோசித்து வருகின்றன.

இந்தியா, ரஷியா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு, தில்லியில் டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இந்தியா வரவுள்ளார்.

மாநாட்டில் பிரதமர் மோடியும், விளாதிமீர் புதினும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கவுள்ளனர். ராணுவம், வர்த்தகம், எரிசக்தி, முதலீடு, அறிவியல்-தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் எனத் தெரிகிறது.

இந்த மாநாட்டுக்கு இடையே இரு நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டை நடத்துவதற்கு இரு நாடுகளும் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாநாடு உறுதிசெய்யப்பட்டால், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கி சோய்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ராவ் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவார்கள்.

எஸ்.ஜெய்சங்கரும் ராஜ்நாத் சிங்கும் நவம்பர் இறுதி வாரத்தில் ரஷியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், நவம்பர் 29-ஆம் தேதி தொடங்குவதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

மேலும், இந்தியா-அமெரிக்கா இடையேயான வெளியுறவு, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க எஸ்.ஜெய்சங்கரும் ராஜ்நாத் சிங்கும் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்தனர். பின்னர், அந்தப் பயணத் திட்டம் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com