இந்திய, சீன உறவு மோசமான நிலையில் உள்ளது: வெளியுறவுத்துறை அமைச்சர்

இருநாடுகளுக்கிடையேயான உறவில் இந்தியாவின் நிலைபாடு என்ன என்பது குறித்து சீனாவிற்கு சந்தேகம் இருக்காது என நினைக்கிறேன் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திய, சீன நாடுகளுக்கிடையேயான உறவு மோசமான நிலையில் உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கிடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மீறி சீனா, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஆனால், அதற்கான விளக்கத்தை அளிக்கவில்லை என்றும் அவர் விமரிசனம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியா, சீனா நாடுகளுக்கிடையேயான இரு தரப்பு உறவை எங்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு சீன தலைவர்கள்தான் பதில் அளிக்க வேண்டும் என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

'வல்லரசு நாடுகளுக்கிடையேயான அதிகார போட்டி: தோன்றியுள்ள உலக ஒழுங்கு' என்ற பெயரில் சிங்கப்பூரில் நடைபெற்ற புதிய பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், "எங்கள் உறவில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம், அதில் எது சரியாகப் போகவில்லை என்பதில் சீனர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று நினைக்கிறேன். 

நான் பலமுறை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை சந்தித்து இருக்கிறேன். முன்பு பேசியிருப்பது போலவே, நியாயமான முறையில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நான் மிகவும் தெளிவாகப் பேசுகிறேன். நான் தெளிவு இல்லாமல் பேசவில்லை. எனவே அவர்கள் அதைக் கேட்க விரும்பினால் அவர்கள் அதைக் கேட்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

கல்வான் மோதல் குறித்து பேசிய அவர், "எங்கள் உறவில் நாங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம், ஏனென்றால் அவர்கள் ஒப்பந்தங்களை மீறி பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் பதில் அளிக்க வேண்டிய கேள்விக்கு இன்னும் நம்பத்தகுந்த விளக்கத்தைக் அளிக்கவில்லை" என்றார்.

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஆண்டு மே மாதம் பாங்காங் ஏரி பகுதியில் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் வெடித்தது. பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் கனரக ஆயுதங்களை அங்கு குவித்து, இருநாடுகளும் தங்கள் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. தொடர்ச்சியான இராணுவ மற்றும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, இரு தரப்பினரும் பிப்ரவரியில் பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளிலும், ஆகஸ்ட் மாதத்தில் கோக்ரா பகுதியில் இருந்தும் தங்களின் படைகளை விலக்கி கொண்டனர்.

இருப்பினும், அக்டோபர் 10ஆம் தேதி நடந்த கடைசிச் சுற்று ராணுவப் பேச்சுவார்த்தை எந்த வித பலனும் அளிக்காமல் நிறைவுபெற்றது. மற்ற பகுதிகளில் இருந்து படைகளை திரும்பபெறுவது குறித்து இரு நாடுகளுக்கிடையே ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com