அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஹைதர்போரா என்கவுண்டர்; குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய குப்கர் கூட்டணி

இந்த சம்பவத்தை சுற்றிய முடிச்சுகளை அவிழ்த்து, உண்மைகளை பொதுவெளிக்கு கொண்டு வர நீதிமன்ற விசாரணை தேவை என குப்கர் கூட்டணி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீக்கப்பட்ட அரசியலைப்பு சட்டம் 370ஐ மீண்டும் கொண்டு வரக் கோரி இயங்கிவரும் குப்கர் கூட்டணி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஹைதர்போரா என்கவுண்டர் விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை தேவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைதர்போராவில் நடைபெற்ற என்கவுண்டர் சம்பவத்தில் ஸ்ரீநகரை சேர்ந்த இரண்டு வணிகர்கள் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவருகிறது.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா தலைமையிலான குப்கர் கூட்டணி குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில், "நவம்பர் 15 ஆம் தேதி மாலை ஸ்ரீநகரில் உள்ள ஹைதர்போராவில் நடந்த சோகமான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், மூன்று பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் கொல்லப்பட்டனர்.

இதற்கு நீதிமன்ற விசாரணை தேவை. குறிப்பிட்ட கால அளவுக்குள் இதை நடத்தி முடிக்க வேண்டும். அப்போதுதான், இதனால் உண்மைகள் பொதுவெளிக்கு கொண்டு வரப்படும். இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துகின்றன, எனவே, எந்த விலையிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

துணை ஆளுநர் முகவராக செயல்பட உங்களின் பெயரில்தான் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம். எனவே, சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதையும் தவறு செய்யும் அலுவலர்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் உறுதிப்படுத்துவது உங்களின் பொறுப்பு. 

கண்ணியமாக அடக்கம் செய்வதற்கான உரிமை இந்திய அரசியலமைப்பிலும், சர்வதேச சட்டத்திலும் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை நிலவுவதாக சொல்லப்படும் எந்த சூழ்நிலையிலும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை மறுக்க முடியாது. இறந்தவர்களின் குடும்பங்கள் தங்கள் மத நடைமுறைகளுக்கு ஏற்ப இறந்த உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய உரிமை உண்டு.

கடந்த சில ஆண்டுகளில், இத்தகைய உரிமைகள் தண்டனையின்றி மீறப்பட்டுள்ளன. ஹைடர்போரா சம்பவத்தில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இவ்விவகாரத்தில் தலையிட்டு, இறந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பித் தருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இதனால் அவர்கள் அந்தந்த மத நடைமுறைகளின்படி அவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்ய முடியும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com