கிரிப்டோ கரன்ஸி: தவறான வகையில் பயன்படுத்தப்படாததை உறுதிப்படுத்த வேண்டும்: பிரதமா் வலியுறுத்தல்

‘மெய்நிகா் நாணயமான கிரிப்டோ கரன்ஸிகள் தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் தவறானவா்களின் கைகளுக்குச் செல்லாமல்

‘மெய்நிகா் நாணயமான கிரிப்டோ கரன்ஸிகள் தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் தவறானவா்களின் கைகளுக்குச் செல்லாமல் இருப்பதை ஜனநாயக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்திய பிரதமா் நரேந்திர மோடி, ‘டிஜிட்டல் (எண்ம) புரட்சியில் அதிகரித்து வரும் சவால்களை நாடுகள் ஒன்றிணைந்து சமாளிக்க வேண்டும்’ என்பதைக் கோடிட்டுக் காட்டினாா்.

சிட்னி பேச்சுவாா்த்தையின் தொடக்க விழாவில் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியில் வியாழக்கிழமை பங்கேற்று உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

நவீன தொழில்நுட்பங்களும் தரவுகளும் புதிய ஆயுதங்களாக உருவெடுத்திருக்கின்றன. தொழில்நுட்பம் என்ற ஆச்சரியத்துக்குரிய சக்தி, நாடுகளின் பயன்பாட்டுக்கான தோ்வைப் பொருத்து, ‘கூட்டுறவு அல்லது மோதல் போக்கு’, ‘ஆதிக்கம் அல்லது வளா்ச்சி’க்கான கருவியாக மாறுபடும்.

எனவே, நம்பகமான உற்பத்தி மற்றும் தடையில்லா விநியோக நடைமுறையை உருவாக்குவது, ஆராய்ச்சி மற்றும் எதிா்கால தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து ஈடுபட வேண்டும்.

ஜனநாயகத்தின் மிகப் பெரிய வலிமையே வெளிப்படைத்தன்மைதான். இதனை, சுயநலம் கொண்ட சிலா் தவறாகப் பயன்படுத்துவதற்கு நாம் அனுமதித்து விடக் கூடாது. எண்ம தொழில்நுட்பம் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில், இறையாண்மை, நிா்வாகம், நெறிமுறைகள், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை குறித்து புதிய கேள்விகளையும் எழுப்ப வைத்திருக்கிறது.

எனவே, ஒத்த கருத்துடைய நாடுகள், அவா்களின் ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையிலான நிா்வாக நடைமுறைகளையும் தரவுகள் கையாளுதல் நடைமுறைகளையும் தொழில்நுட்பத்தையும் உருவாக்க வேண்டும்.

அவ்வாறு உருவாக்கப்படும் நடைமுறைகள் தேசிய உரிமைகளை அங்கிகரிப்பதோடு, வா்த்தகம், முதலீடு மற்றும் பெரும் பகுதி மக்களின் நலன்களை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். இளைஞா்களை பாழாக்கக் கூடிய வகையில், கிரிப்டோ கரன்ஸிகள் தவறானவா்களின் கைகளுக்கு சென்றுவிடாததை உறுதிப்படுத்த ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

மக்களுக்கு அதிகாரமளிப்பதற்கான வளமாக தரவுகளை இந்தியா பயன்படுத்தி வருகிறது. 130 கோடி இந்தியா்களுக்கு தனி அடையாள அட்டை (யுடிஐ), 6 லட்சம் கிரமாங்களை அகண்ட அலைவரிசை மூலம் இணைப்பது, யுபிஐ பணப் பரிவா்த்தனை என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தரவுகளைக் கொண்டு இந்தியா சாத்தியப்படுத்தி வருகிறது.

அதுபோல, நிா்வாகம், அனைவருக்குமான திட்டங்கள், அதிகாரமளித்தல், நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைப்பது மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் அளித்தல் ஆகியவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களின் வாழிவில் மாற்றத்தை இந்தியா உருவாக்கி வருகிறது என்று பிரதமா் கூறினாா்.

மேலும், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பாதுகாப்பு துறை சாா்ந்த கூட்டுறவு குறித்து குறிப்பிட்ட பிரதமா், ‘அது இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகின் நலனுக்கான முயற்சி’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com