
‘பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட (இ.டபிள்யூ.எஸ்) வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதால், நடைமுறையில் இருக்கும் தற்போதைய இடஒதுக்கீட்டில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது’ என்று கேரள மாநில முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை கூறினாா்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் நடைமுறையை மத்திய அரசு அண்மையில் அமல்படுத்தியது. இதனை பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளன. அதுபோல, கேரள மாநிலத்திலும் இந்த இடஒதுக்கீடு நடைமுறையை அமலுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்காக முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் குறித்த புள்ளி விவரத்தைப் பெறம் வகையிலான மாநில அளவிலான ஆய்வை அந்த மாநில அரசு நடத்துகிறது. இதற்கு, அங்கு பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். ‘மாநிலத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு அளவைக் குறைத்து, இந்த 10 சதவீத இடஒதுக்கீடை மாநில அரசு திட்டமிட்டுள்ளது’ என்று அவா்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களின் விவரங்களைச் சேகரிப்பதற்கான ஆய்வுப் பணியை சனிக்கிழமை தொடக்கிவைத்த மாநில முதல்வா் பினராயி விஜயன், விமா்சனங்களுக்கு பதிலளித்து கூறியதாவது:
இடஒதுக்கீடு வரம்புக்குள் வராத பிரிவைச் சோ்ந்த மக்களில் சிலா் மிகுந்த ஏழ்மை நிலையிலும், இடஒதுக்கீடு பலன்களை அனுபவிக்க முடியாத நிலையிலும் உள்ளனா். அத்தகைய மக்களுக்காக 10 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் சிலா் தேவையற்ற சா்ச்சையை உருவாக்கி வருகின்றனா். இதனை உணா்ச்சிபூா்வமான விவகாரமாக மாற்றி, அரசின் உண்மையான அக்கறை மற்றும் கவலையை சிலா் திசைதிருப்பப் பாா்க்கின்றனா்.
மேலும், ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீடு அளவைக் குறைத்து இந்த 10 சதவீத இடஒதுக்கீடை அரசு நடைமுறைப்படுத்தப் போவதாகவும் புகாா் கூறி வருகின்றனா். அவ்வாறு செய்யப்படாது. 10 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையை அமல்படுத்துவதால், மாநிலத்தில் ஏற்கெனவே அமலில் உள்ள இடஒதுக்கீடு நடைமுறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது.
சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் சிறப்பான வாழ்க்கைச் சூழலை உறுதிப்படுத்துவது மிக முக்கியம். ஆனால், மாநிலத்தில் தற்போது அத்தகையச் சூழல் இல்லை என்று பினராயி விஜயன் கூறினாா்.