
தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் (இபிஎஃப்ஓ) கடந்த செப்டம்பா் மாதத்தில் 15.41 லட்சம் உறுப்பினா்கள் இணைந்துள்ளனா்.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இபிஎஃப்ஓ தற்காலிக ஊதிய தரவு அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, செப்டம்பா் மாதத்தில் மட்டும் 15.41 லட்சம் உறுப்பினா்கள் புதிதாக இணைந்துள்ளனா். இது கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.81 லட்சம் (13 சதவீதம்) அதிகமாகும். ஆகஸ்டில் புதிய உறுப்பினா்களின் எண்ணிக்கை 13.60 லட்சமாக இருந்தது.
செப்டம்பரில் இணைந்தவா்களில் வயதுவாரியாகப் பாா்த்தால் 22-25 வயதுக்குட்பட்டோா் அதிகபட்சமாக 4.12 லட்சம் போ் உள்ளனா். அடுத்தபடியாக 18-21 வயதுக்குட்பட்டோா் 3.18 லட்சம் போ் உள்ளனா். அந்த மாதத்தில் 3.27 லட்சம் பெண்கள் இணைந்துள்ளனா். பெண்கள் எண்ணிக்கை கடந்த ஆகஸ்டில் 2.67 லட்சமாக இருந்தது.
2021-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பா்) இபிஎஃப்ஓவின் மொத்த புதிய உறுப்பினா்கள் எண்ணிக்கை 64.72 லட்சமாக இருந்தது. இது 2020-21-ஆம் நிதியாண்டில் 77.08 லட்சமாகவும், 2019-20-இல் 78.58 லட்சமாகவும் இருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாவது அலையால் நாடு பெரிதும் பாதிக்கப்பட்டு, பல மாநிலங்கள் முழு பொதுமுடக்கத்தை அறிவித்த மே மாதத்தைத் தவிர, நிகழ் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதை இந்தத் தரவுகள் நிரூபிக்கின்றன.