
அண்ணனூர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை வெள்ளம்.
தமிழகத்தில் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட மத்தியக் குழு இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இன்னும் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருகிறது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் வெள்ள பாதிப்புகளில் ரூ. 2,629.29 கோடி சேதம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மத்திய அரசிடயம் கோரிக்கை வைத்ததையடுத்து, முதற்கட்டமாக ரூ. 549.63 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
தொடர்ந்து, தமிழகத்தில் மழை, வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய உள்துறை இணைச் செயலர் ராஜிவ் சர்மா தலைமையில் மத்தியக் குழு இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளது. இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து நாளையும், நாளை மறுநாளும் ஆய்வு செய்ய உள்ளனர்.
நாளைய தினம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஒரு குழுவும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மற்றொரு குழுவும் செல்கின்றன. நாகை, திருவாருர், தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டையில் நாளை மறு நாள் ஆய்வு நடைபெறவுள்ளது. வருகிற 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்தியக் குழுவினர் நேரில் சந்தித்தும் பேசவுள்ளனர்.