
கோப்புப்படம்
உத்தரகண்டில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவசமாக பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்டில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி, அரவிந்த் கேஜரிவால் ஹரித்வாரில் ஞாயிற்றுக்கிழமை பேரணியில் கலந்துகொண்டு பேசினார்.
"தில்லியில் நாங்கள் சிறப்பான பள்ளிகளைக் கட்டியுள்ளோம். எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். உத்தரகண்டிலும் சிறப்பான பள்ளிகளைக் கட்டுவோம். இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவோம். மொஹல்லா கிளினிக், மருத்துவமனைகள் மூலம் மாநிலத்தில் சிறந்த சுகாதார உள்கட்டமைப்பை ஆம் ஆத்மி வழங்கும்.
இதையும் படிக்க | ஆந்திர மாநில மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும்: ராகுல் காந்தி
அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்படும். அயோத்திக்கான முதல் ரயில் டிசம்பர் 3-இல் தொடங்குகிறது. மக்கள் ஏசி ரயில் பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளலாம். ஏசி விடுதிகளில் தங்கலாம். இந்தப் பயணத்தின்போது உணவு உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
முதல்வர் வேட்பாளர் அஜய் கோதியாலுக்கு வாக்களியுங்கள். அவர் கேதர்நாத்தை மறு உருவாக்கம் செய்தவர். தற்போது உத்தரகண்டை மறு உருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது.
காங்கிரஸ், பாஜக இடையே ஒப்பந்தம் உள்ளது. முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு கட்சி ஆட்சியிலிருந்து மக்கள் வளங்களைக் கொள்ளையடிக்கும். அடுத்த 5 ஆண்டுகள் அடுத்த கட்சிக்கு இதே வாய்ப்பு கிடைக்கும்.
தில்லியில் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல உத்தரகண்டிலும் ஒரு வாய்ப்பு கேட்கிறோம். நீங்கள் மற்ற கட்சிகளை மறந்துவிடுவீர்கள்" என்றார் கேஜரிவால்.