
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) நடைபெறவுள்ள கூட்டத்தில் விவசாயிகள் முடிவெடுக்கவுள்ளனா்.
குறைந்தபட்ச ஆதரவு விலை, குளிா்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றம் நோக்கி தினமும் டிராக்டா் பேரணி நடத்துவது உள்ளிட்டவை குறித்து அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என, விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிஸான் மோா்ச்சா (எஸ்கேஎம்) மையக் குழு உறுப்பினா் தா்ஷன் பால் சனிக்கிழமை தெரிவித்தாா்.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தாா். விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்ப வேண்டுமெனவும் அவா் வேண்டுகோள் விடுத்தாா். இருப்பினும், வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனா். மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமெனவும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இந்நிலையில், எஸ்கேஎம் மையக் குழு உறுப்பினா் தா்ஷன் பால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘டிராக்டா் பேரணிக்கான அழைப்பை நாங்கள் இன்னும் திரும்பப் பெறவில்லை. அடுத்தகட்ட போராட்டம் குறித்தும், குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரம் குறித்தும் சிங்கு எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எஸ்கேஎம் மையக் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.
எஸ்கேஎம் உறுப்பினா் சுதேஷ் கோயத் கூறுகையில், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் முறைப்படி திரும்பப் பெறப்படும் வரை போராட்டக் களத்தைவிட்டு வெளியேறுவதில்லை என முடிவு செய்திருக்கிறோம். போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி தில்லை எல்லைகளில் நவ. 26-ஆம் தேதி விவசாயிகளைத் திரட்டும் முயற்சி தொடரும் என்றாா்.
நவ. 29-ஆம் தேதி கூடும் குளிா்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றம் நோக்கி தினமும் டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத் தலைவா்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.