
மக்கள் பிரதிநிதிகளுக்கு பிற எதையும்விட நாடு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஓம் பிா்லா சனிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவரிடம் இம்ரான் கானை தனது மூத்த சகோதரா் என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து கூறியது குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘‘தங்கள் கருத்துகளை நாடாளுமன்றத்தில் அல்லது பொதுவெளியில் தெரிவிக்கும் போது மக்கள் பிரதிநிதிகளுக்கு பிற எதையும்விட நாடு முக்கியமானதாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘‘எந்தவொரு சட்டத்தையும் கொண்டுவருவதும் திரும்பப் பெறுவதும் அரசின் பணி. மக்களவைத் தலைவராக அதுகுறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை’’ என்றாா்.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் குறித்து பேசிய அவா், ‘‘கூட்டத்தொடா் சுமுகமாக நடைபெறும் என்று நம்புகிறேன். அதில் அனைத்து விவகாரங்களும் விவாதிக்கப்பட வேண்டும்’’ என்று கூறினாா்.
சிம்லாவில் நடைபெற்ற அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தலைவா்கள் மாநாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘‘மாநாட்டில் சில வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
நாடு முழுவதும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை கொண்டுவர தீா்மானிக்கப்பட்டது. அந்த நடைமுறைகளின் மாதிரி விதிமுறைகளை நாடாளுமன்றம் வகுக்கும்.
மாநாட்டில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்ளும் விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அதுகுறித்து மேலும் விவாதம் நடைபெறும்’’ என்று தெரிவித்தாா்.