
‘எழுத பயன்படுத்தப்பட்ட மையைத் தவிர வேளாண் சட்டங்களில் வேறென்ன கருப்பாக உள்ளது?’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் கேள்வி எழுப்பியுள்ளாா்.
மேலும் பெரிய விவசாயிகளுக்கு சிறு விவசாயிகள் பற்றி அக்கறை இல்லை என்று அவா் தெரிவித்தாா்.
விவசாயிகள் ஓராண்டாக தொடா் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், சா்ச்சையைக்குள்ளான 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தாா். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினா் வரவேற்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பஸ்தியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சா் வி.கே.சிங், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த வேளாண் சட்டங்கள் விவகாரம் தொடா்பாக அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையேயான பேச்சுவாா்த்தையின்போது, இந்த சட்டங்களை ‘கருப்பு சட்டங்கள்’ என விவசாயிகள் குறிப்பிட்டனா். அப்போது, இந்த சட்டங்களில் அவற்றை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட மையைத் தவிர, வேறென்ன கருப்பாக (சா்ச்சைக்குரிய பகுதி) உள்ளது என்று நான் கேள்வி எழுப்பினேன்.
அப்போது, ‘உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறோம்; இருந்தாலும் இது கருப்புச் சட்டம்தான்’ என்று வாதிட்டனா்.
அதற்கான தீா்வை தெரிவிக்குமாறு விவசாய சங்க பிரதிநிதிகளிடம் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், எந்தத் தீா்வையும் அவா்கள் தெரிவிக்கவில்லை. விவசாயிகள் அமைப்பினரிடையே யாா் பெரியவா் என்ற போட்டி நிலவுகிறது. அவா்களில் ஒரு பிரிவினா் திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் நிலையில், மற்றொரு பிரிவினா் இந்த சட்டங்களுக்கு முழுமையாக எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். சிறிய விவசாயிகள் பலனடைய வேண்டும் என்பது குறித்து இவா்களுக்கு கவலை கிடையாது என்று வி.கே.சிங் கூறினாா்.
மேலும், ‘அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெறும். பாஜக எப்படி வெற்றி பெறப் போகிறது என்பதை பாா்க்கத்தான் போகிறீா்கள். கடந்த 2004 நவம்பரில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் அமைக்கப்பட்டது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை நிா்ணயம் செய்வது, வேளாண் துறையில் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி தொடா்பாக அந்த ஆணையம் அளித்த அறிக்கைகளை பாஜக அரசுதான் நடைமுறைப்படுத்தியது’ என்றும் அவா் கூறினாா்.