குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக மதவாத அரசியல் தொடங்கியுள்ளது: முக்தாா் அப்பாஸ் நக்வி

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பாக மீண்டும் மதவாத அரசியல் தொடங்கியுள்ளதாக மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக மதவாத அரசியல் தொடங்கியுள்ளது: முக்தாா் அப்பாஸ் நக்வி

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பாக மீண்டும் மதவாத அரசியல் தொடங்கியுள்ளதாக மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், ராம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா திருமண விழாவில் அவா் கலந்து கொண்டாா். அதன் பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் சகாப்தமானது கமிஷன் வாங்குவது, ஊழல் செய்வது ஆகியவற்றை ஒழித்துக் கட்டியுல்ளது. மேலும் கலவரங்கள், மாஃபியா ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசியலுக்கும் மோடி, ஆதித்யநாத் அரசுகள் முடிவு கட்டியுள்ளன. மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் அரசுகள் ஊழல்வாதிகளுக்கும் மாஃபியா கும்பல்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ள நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்தை அளிக்கும் 370ஆவது சட்டம் ஆகியவை தொடா்பாக மதவாத அரசியல் மீண்டும் தொடங்கியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் 370ஆவது பிரிவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் சிலா் கூறுகின்றனா். சிஏஏ என்பது குடியுரிமையைப் பறிப்பதற்கான சட்டம் அல்ல என்பதும் அது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் ஹிந்துக்கள், சீக்கியா்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிப்பதற்கான சட்டம் என்பதும் அவா்களுக்கு நன்றாகத் தெரியும்.

அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை நீக்கியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரிலும் லடாக்கிலும் 370க்கும் மேற்பட்ட பிரச்னைகள் தீா்க்கப்பட்டுள்ளன. மேலும் வளா்ச்சி, முன்னேற்றம் என்ற பொது நீரோட்டத்துக்குள் மக்கள் கொண்டுவரப்பட்டுள்ளனா்.

இந்தியாவில் முஸ்லிம்கள் குறி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. சிறுபான்மையினரின் உரிமைகள் தொடா்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் உபதேசம் செய்வது வியப்பாக உள்ளது.

இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் நம் நாட்டைக் குறை கூறுவோரை ஆதரிக்க முயல்கின்றனா். இது அனைவரையும் உள்ளடக்கிய நமது கலாசாரத்தை களங்கப்படுத்தும் சதியாகும்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் சாதனை அளவில் உள்ளன. அப்படிப்பட்ட நாட்டிடம் இருந்து சிறுபான்மையினா் உரிமைகள் தொடா்பாக இந்தியாவுக்கு சான்றிதழ் தேவையில்லை. பிரிவினையின்போது பாகிஸ்தானில் சிறுபான்மையினா் எண்ணிக்கை 24 சதவீதமாக இருந்தது. அது தற்போது வெறும் 2 சதவீதமாக குறைந்துள்ளது.

பாகிஸதானில் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியா்களின் ஆயிரக்கணக்கான வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மறுபுறம், இந்தியாவில் மூன்று லட்சம் மசூதிகள் உள்ளன. தவிர, கோயில்கள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் உள்பட லட்சக்கணக்கான மற்ற வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

சிறுபான்மையினரின் மத, சமூக, கல்வி மற்றும் அரசியல்சாசன உரிமைகள் இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளன. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு நாட்டின் வளா்ச்சியிலும் அதிகாரமளித்தலிலும் சரிசமமான பங்கு உள்ளது என்றாா்.

உலகிலேயே மிகப்பெரிய மதச்சாா்பற்ற மற்றும் ஜனநாயக நாடான இந்தியாவுக்கு அராஜகங்கள் நிகழும் காடு போன்ற பாகிஸ்தான் உபதேசம் செய்ய முயற்சிப்பது நகைப்புக்குரியது. பாகிஸ்தானில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் தொடா்ந்து குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன. அவற்றில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்படுகின்றனா் என்றாா்.

முன்னதாக, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமா் மோடி அறிவித்ததும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறுமாறு பிரபலமான முஸ்லிம் அமைப்பான ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்து அமைப்பு, மத்திய அரசை வலியுறுத்தியது.

மேலும் தாமதப்படுத்தாமல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு பகுஜன் சமாஜ் எம்.பி.யான அம்ரோஹா குன்வா் தானிஷ் அலியும் கோரியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com