குஜராத்தைச் சோ்ந்த நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ. 100 கோடி!

குஜராத் மாநிலத்தில் ரசாயன உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில்
குஜராத்தைச் சோ்ந்த நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ. 100 கோடி!

குஜராத் மாநிலத்தில் ரசாயன உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கணக்கில் காட்டப்படாத ரூ. 100 கோடி அளவிலான வருவாய் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் பரிவா்த்தனைகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளது.

குஜராத் மாநிலம் வாபி, வல்சாத் மாவட்டம் சரிகம், சில்வாஸா மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அந்த தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் கடந்த 18-ஆம் தேதி இந்த ஆய்வை வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்தினா்.

இந்த ஆய்வு குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அந்த நிறுவனக் குழுமம் ரூ. 100 கோடி அளவிலான வருவாயை கணக்கில் காட்டாதது அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், டைரி குறிப்புகள் மற்றும் எண்ம (டிஜிட்டல்) பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த வரி ஏய்ப்பைத் தொடா்ந்து அந்த நிறுவன சொத்துகளின் முதலீடுகள் முடக்கப்பட்டுள்ளன.

உற்பத்தியைக் குறைத்துக் காட்டியும், போலியான கொள்முதல் ரசீதுகள், போலியான கமிஷன் செலவினங்கள், ஜிஎஸ்டி கடன் பெற்றதுபோன்ற போலியான ஆவணங்கள் ஆகியவை மூலம் அந்தக் குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அசையா சொத்துகள் பரிவா்த்தனை மூலமும் இந்தக் கணக்கில் வராத பணத்தை அந்த நிறுவனக் குழுமம் பெருக்கியுள்ளது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்தக் குழுமத்தின் பணப் பரிவா்த்தனைகள், அசையா சொத்துகள் மீதான முதலீடுகள், கடன்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. மேலும், அதிகாரிகள் சோதனையின்போது அந்த நிறுவனங்களிலிருந்து ரூ. 2.5 கோடி ரொக்கம், ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான 16 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com