கிரிப்டோகரன்சிகளுக்கு தடை; முழு பின்னணி என்ன?

இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கும் வகையில் இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு மசோதா கொண்டு வரவுள்ளது.
 கிரிப்டோகரன்சி
 கிரிப்டோகரன்சி

இந்தியாவில் ஒரு சிலவற்றுக்கு விதிவிலக்கு அளித்து அனைத்து விதமான கிரிப்டோகரன்சிகளுக்கும் (டிஜிட்டல் நாணயம்) தடை விதிக்கும் வகையில் இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு மசோதா கொண்டு வரவுள்ளது. அதேபோல், ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ள டிஜிட்டல் நாணயங்களை ஒழுங்குப்படுத்த வழிமுறை வகுக்கப்படவுள்ளது.

வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா அறிமுகப்படத்தப்படவுள்ளது. அனைத்து விதமான தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கும் அதே சமயத்தில் டிஜிட்டல் நாணயத்தின் அடிப்படை தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாட்டை ஊக்கப்படுத்த விதிவிலக்கு அளிக்கப்படவுள்ளது.

தனியார் கிரிப்டோகரன்சி குறித்து ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்திருந்தது. உலகின் மிக பெரிய டிஜிட்டல் நாணயமான பிட்காயின் 60,000 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகிவந்தது. உள்ளூர் முதலீட்டாளர்களின் கவனம் கிரிப்டோகரன்சிகளின் மீது திரும்பிய நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் அதன் மதிப்பு இரண்டு மடங்கு அதிகமானது. 

இந்தியாவில் மட்டும் 1 கோடியே 50 லட்சத்திலிருந்து 2 கோடி பேர், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துவருவதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு, 40,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

சமீபகாலமாக, கிரிப்டோகரன்சிகள் குறித்து விளம்பரம் செய்வது அதிகரித்துவருகிறது. இதில் முதலீடு செய்வதன் மூலம் எளிதான மற்றும் அதிக வருமானம் கிடைக்கும் என விளம்பரங்களில் உறுதி அளிக்கப்பட்டது. இதுபோன்ற நாணயங்கள் முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தும் உறுதிமொழிகளுடன் கவர்ந்திழுக்க பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கடந்த வாரம், பாஜக உறுப்பினர் ஜெயந்த் சின்ஹா ​​தலைமையிலான நிதித்துறையின் நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள், பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ அசெட்ஸ் கவுன்சில் (பிஏசிசி) ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்து, கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அதை ஒழுங்குப்படத்த வேண்டும் பரிந்துரைக்கப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளில், தனியார் டிஜிட்டல் நாணயங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வந்துள்ளது. ஆனால், ஒழுங்குமுறை ஆணையங்களும் அரசுகளும் இதன் ஆபத்துகள் குறித்து சந்தேகம் எழுப்பின. 

இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அனைத்து விதமான டிஜிட்டல் கரன்சிகளும் 15 சதவிகிதம் வரை சரிவை சந்தித்துள்ளன. பிட்காயின் 18.53 சதவிகிதமும் எத்திரியம் 15.58 சதவிகிதமும் டெத்தர் 18.29 சதவிகிதமும் சரிவை சந்தித்துள்ளன. 

கிரிப்டோகரன்சிகளை சட்டப்பூர்வமான பணமாக எல் சால்வடோர் நாடு மட்டுமே அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com