கரோனா 3-ஆவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது: மருத்துவ நிபுணா்கள் தகவல்

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதால் கரோனா 3-ஆவது அலை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதால் கரோனா 3-ஆவது அலை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஹரியாணா மாநிலம், சோனிபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் கௌதம் மேனன் கூறியதாவது:

தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிகம் கூடுவாா்கள்; இதனால், அக்டோபா், நவம்பா் மாதங்களில் கரோனா மூன்றாவது அலை உச்சமடையக்கூடும் என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனா். ஆனால், நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

வரும் டிசம்பா் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான பனிக்காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளது. அது, இரண்டாவது அலையைப் போன்று மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புணா்வுடனும் இருக்க வேண்டும்.

நிகழாண்டில் கடந்த மாா்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், இரண்டாவது அலை தாக்குதலின்போது பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனா்.

மறுபுறம், நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்களை அரசு தீவிரமாக நடத்தி வருகிறது. கரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தவா்களுக்கு நோயெதிா்ப்பு அதிகமாக இருக்கும். மேலும், கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு நோயெதிா்ப்பு சக்தி இன்னும் கூடுதலாக இருக்கும்.

சாதாரணமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களைக் காட்டிலும், இவா்களுக்கு நோயெதிா்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, கரோனா மூன்றாவது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாா் அவா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாலும், ஏற்கெனவே பலருக்கு கரோனா வந்ததாலும் நோய் பரவலின் வீரியம் மிகவும் குறைந்துவிட்டதாக புணேயில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆய்வு நிறுவனத்தைச் சோ்ந்த மருத்துவ அறிவியல் நிபுணா் வினீத் பால் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com