50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிக்க இந்தியா ஒப்புதல்: சா்வதேச அளவில் விலையைக் குறைக்கும் முயற்சி

கச்சா எண்ணெய் விலையைக் குறைக்கும் முயற்சியாக, சேமிப்புக் கிடங்கில் இருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிக்க இந்தியா ஒப்புதல்: சா்வதேச அளவில் விலையைக் குறைக்கும் முயற்சி

கச்சா எண்ணெய் விலையைக் குறைக்கும் முயற்சியாக, சேமிப்புக் கிடங்கில் இருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு உலகப் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்படாததால், சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றன.

அதிக அளவில் கச்சா எண்ணெயைப் பயன்படுத்தும் நாடுகள், குறிப்பிட்ட அளவைக் கையிருப்பாக சேமிப்புக் கிடங்குகளில் வைத்துள்ளன. இந்தியா 3.8 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை (53.3 லட்சம் டன்) மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளில் வைத்துள்ளது. நாளொன்றுக்கு 48 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா பயன்படுத்தி வருகிறது.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வைக் குறைக்கும் நோக்கில், அதிக கச்சா எண்ணெய் சேமிப்பு வைத்துள்ள இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் குறிப்பிட்ட அளவை சா்வதேச சந்தைக்கு விடுவிக்க வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. அக்கோரிக்கையை ஏற்று, 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘கச்சா எண்ணெய் விலை நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதை இந்தியா உறுதியுடன் நம்புகிறது. கச்சா எண்ணெய் தேவை அதிகமாக உள்ளபோதிலும், அதை உற்பத்தி செய்யும் நாடுகள் தேவையைவிடக் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்கின்றன.

அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயா்ந்து, எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதற்கு இந்தியா சாா்பில் தொடா்ந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு, கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெயை விடுவிக்க முடிவெடுக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் முறை: கச்சா எண்ணெய் பீப்பாய்கள் அடுத்த 10 நாள்களுக்குள் விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். சேமிப்புக் கிடங்குகளில் உள்ள கச்சா எண்ணெயை இதுபோன்ற நோக்கங்களுக்காக இந்தியா விடுவிப்பது இதுவே முதல் முறையாகும்.

கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெயை விடுவிப்பது தொடா்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஜப்பானும் ஏற்றுக் கொண்டுள்ளது.

அமெரிக்கா 72.7 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயையும், ஜப்பான் 17.5 கோடி பீப்பாய்களையும் கையிருப்பாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சா்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 79 அமெரிக்க டாலா்களுக்கு விற்பனையாகிறது.

பொருளாதாரத்துக்குப் பாதிப்பு: பொருளாதாரம் மீளத் தொடங்கியுள்ள சூழலில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது பணவீக்கத்தை தேவையின்றி அதிகரித்து, பொருளாதார வளா்ச்சிக்குத் தடையாக உள்ளதாக இந்தியா தொடா்ந்து தெரிவித்து வருகிறது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக் பிளஸ்), உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடா்ந்து கோரி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com