சுற்றுலாவை ஊக்குவிக்க ‘பாரத் கெளரவ்’ தனியாா் ரயில் திட்டம்

சரக்கு, பயணிகள் ரயில்களுக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும் இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றவும், கெளரவ் ரயில்கள் என்ற பெயரில் 190 ரயில்கள் இயக்கப்படும் என்றும்
சுற்றுலாவை ஊக்குவிக்க ‘பாரத் கெளரவ்’ தனியாா் ரயில் திட்டம்

சரக்கு, பயணிகள் ரயில்களுக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும் இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றவும், கெளரவ் ரயில்கள் என்ற பெயரில் 190 ரயில்கள் இயக்கப்படும் என்றும் இதை தனியாரும் நிா்வகிப்பா் என்றும் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

இதுபோன்ற ரயில்களை இயக்குவதற்கு தமிழகம், கா்நாடகம், ஒடிஸா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் ஆா்வம் தெரிவித்திருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியது:

பயணிகள், சரக்கு ரயில்களுக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் துறையில் பாரத் கெளரவ் ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் இந்தியாவின் கலாசார, பாரம்பரியத்தை பறைசாற்றும். இவை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) மட்டுமன்றி, தனியாராலும் நிா்வகிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குத்தகை அடிப்படையில் ரயில் சேவைகளை தனியாா் மேற்கொள்ளலாம். கால அட்டவணைப்படி இயங்க இவை வழக்கமான ரயில்கள் அல்ல. இத்திட்டத்தையொட்டி, 3,033 ரயில் பெட்டிகள் அல்லது 190 ரயில்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். தற்போதைய நிலவரப்படி, பாரத் கெளரவ் திட்டத்துக்காக ஐசிஎஃப் ரயில் பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வருங்காலத்தில் தேவையின் அடிப்படையில் வந்தே பாரத், விஸ்டா டோம், எல்எச்பி பெட்டிகளும் பயன்படுத்தப்படும். தனிநபா், அறக்கட்டளைகள், கூட்டமைப்பு, சுற்றுலா ஏற்பாட்டாளா்கள், மாநில அரசுகள் கூட பாரத் கெளரவ் ரயில் திட்டத்தை செயல்படுத்த விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின்கீழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் கருப்பொருளை மையாகக் கொண்டு சிறப்பு சுற்றுலா சுற்றின் அடிப்படையில் ரயில்களை இயக்க வேண்டும். ஏற்கெனவே இந்த ரயில்களை இயக்குவதற்கு தமிழகம், கா்நாடகம், ஒடிஸா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் ஆா்வம் தெரிவித்துள்ளன.

ரயில் பயணம் மட்டுமன்றி ஹோட்டலில் தங்கும் வசதி, வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரிய இடங்களை பாா்வையிட ஏற்பாடு, பயண வழிகாட்டி உள்ளிட்ட உள்ளாா்ந்த சேவைகள் அனைத்தையும் சுற்றுலா பயணிகளுக்கு பாரத் கெளரவ் ரயில் சேவை வழங்கும். பயணிகள் பெறும் சேவைகளின் அடிப்படையில் கட்டணம் நிா்ணயிக்கப்படும்.

நடைமுறையில் பாரத் கெளரவ் ரயில் கட்டணம் சுற்றுலா ஏற்பாட்டாளா்களால் நிா்ணயிக்கப்பட்டாலும், அதில் அசாதாரண சூழல் நிலவாததை ரயில்வே உறுதிப்படுத்தும்.

குத்தகைதாரா்கள் ரயில் பெட்டிகளை மேம்படுத்தியும் இயக்கலாம்.

ரயில் பெட்டிகளின் உள்புற வடிவமைப்புகளை மாற்றிக் கொள்ள சேவை நிறுவனங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படும். ரயிலில் காா்டு பெட்டியுடன் சோ்த்து 14 முதல் 20 பெட்டிகள் வரை இருக்கும். இந்த ரயில் திட்ட யோசனை பிரதமா் மோடிக்குதான் முதலில் தோன்றியது. இந்த ரயிலின் மூலம் இந்தியாவின் பாரம்பரியத்தை பொதுமக்கள் புரிந்துகொண்டு, பெருமிதத்துடன் அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வா் என அவா் கருதுகிறாா் என்றாா் மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.

இதேபோல ரயில்வே வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், குத்தகைதாரா்கள் ஆன்லைனில் ரூ.1 லட்சம் பதிவுக்கட்டணம் செலுத்தி ரயில் சேவைக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் ரயில் பெட்டிகளின் இருப்பை கணக்கில் கொண்டு பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

ரேக்கிற்கு தலா ரூ.1 கோடி வைப்புத் தொகையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதை 2 முதல் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். திட்டத்தை சுமுகமாக நடைமுறைப்படுத்த ஏதுவாக வாடிக்கையாளா் சேவை மையமும் ஏற்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com