கூண்டோடு காலியான காங்கிரஸ்; ஒரு நாள் இரவில் நடைபெற்ற அரசியல் திருப்பம்

கடந்த இரண்டு மாதங்களாகவே, தனது கட்சியை விரிவுப்படுத்த மம்தா முயன்றுவரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இது பேரிடியாக மாறியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேகாலயா மாநில முன்னாள் முதல்வர் முகுல் சங்மா மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேற்குவங்க ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளனர். இரவு 10 மணி அளவில், அம்மாநில சபாநாயகரிடம் தங்கள் நிலைபாடு குறித்து எம்எல்ஏக்கள் கடிதம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம், மேகாலயா மாநிலத்தின் எதிர்கட்சியாக திரிணாமுல் உருவெடுத்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கீர்த்தி ஆசாத், அசோக் தன்வர், ஐக்கிய ஜனதா தள கட்சியின் பவன் வர்மா ஆகியோர் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மம்தா முன்னிலையில் திரிணாமுலில் இணைந்தனர்.

பாஜகவுக்கு எதிரான போரில், திரிணாமுலில் இணைய விரும்பும் பல்வேறு கட்சி தலைவர்களையும் வரவேற்கிறேன் என மம்தா தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு மாதங்களாகவே, தனது கட்சியை விரிவுப்படுத்த மம்தா முயன்றுவரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இது பேரிடியாக மாறியுள்ளது.

குறிப்பாக, அஸ்ஸாம், கோவா, உத்தரப்பிரதேசம், பிகார், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மம்தா கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர். சோனியா காந்தியுடன் நல்லுறவை பேணிவரும் மம்தா, இந்த முறை தில்லி சென்றிருந்தபோது அவரை சந்திக்கவில்லை. இது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியது.

இதுகுறித்து மம்தாவிடம் கேட்டபோது, "சோனியா சந்திக்க நேரம் கேட்கவில்லை. அவர்கள், பஞ்சாப் தேர்தலில் மும்முரம் காட்டிவருகின்றனர். அனைத்து நேரங்களிலும், ஏன் சோனியாவை சந்திக்க வேண்டும்? அவரை சந்திக்க அரசியலமைப்பு என்னை கட்டாயப்படுத்தவில்லை" என்றார்.

இந்நிலையில், கட்சி தாவிய 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இன்று நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளனர். அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திரிபுரா, கோவா ஆகிய மாநிலங்களில், கட்சியை விரிவுப்படுத்த மம்தா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

திரிபுராவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜகவுடன் திரிணாமுல் கடும் மோதல் போக்கை கடைபிடித்துவருகிறது. அதேபோல், கோவாவில் முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோவையே, திரிணாமுல் நம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com