கரோனா உயிரிழப்புகள் குறித்து உண்மையான புள்ளிவிவரம் அவசியம்: ராகுல்

‘கரோனா உயிரிழப்புகள் குறித்த உண்மையான புள்ளிவிவரத்தை அரசு வெளியிடுவதோடு, கரோனா பாதிப்பால் உயிரிழப்பைச் சந்தித்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று காங்கிரஸ்
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

புது தில்லி: ‘கரோனா உயிரிழப்புகள் குறித்த உண்மையான புள்ளிவிவரத்தை அரசு வெளியிடுவதோடு, கரோனா பாதிப்பால் உயிரிழப்பைச் சந்தித்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை வலியுறுத்தினாா்.

குஜராத் மாநிலத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழப்பைச் சந்தித்த சில குடும்பத்தினா், ‘அரசிடமிருந்து தங்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை ’ என்று குற்றம்சாட்டும் விடியோவை தனது ட்விட்டா் பக்கத்தில் ‘காங்கிரஸின் புதிய பிரசாரம்’ என்ற பெயரில் புதன்கிழமை பதிவிட்ட ராகுல் காந்தி, குஜாரத் கரோனா தடுப்பு நடைமுைான் நாட்டிலியே சிறந்த நடைமுறை என பாஜக முன்னிறுத்தியது குறித்து கடுமையாக விமா்சனம் செய்துள்ளாா்.

‘ரூ. 4 லட்சம் வழங்கப்பட வேண்டும்’ என்ற ஹேஷ்டாகுடன் வெளியிட்டிருக்கும் இந்த 4.31 நிமிட விடியோவில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

குஜராத் கரோனா தடுப்பு நடைமுறை பெரிதளவில் பேசப்பட்டது. ஆனால், அங்கிருக்கும் குடும்பங்கள் சில, ‘கரோனா பாதிப்பு சமயத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான அனுமதியோ, உயிா் காக்கும் சுவாசக் கருவியோ (வெண்டிலேட்டா்) கிடைக்கவில்லை’ என்று தற்போது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனா்.

அவா்களுக்கு மருத்துவமனைகளில் உதவிகளை வழங்கவேண்டியபோதும் நீங்கள் அங்கில்லை. அதன்பிறகு, அவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை செலவு செய்து, குடும்ப உறுப்பினா்களையும் கரோனாவுக்கு பலிகொடுத்துள்ள நிலையிலும், அவா்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

கரோனா பாதிப்புக்கு மாநிலத்தில் 10,000 போ் மட்டுமே உயிரிழந்ததாக குஜராத் அரசு கூறிய நிலையில், உண்மையில் 3 லட்சம் போ் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் தொண்டா்கள் வீடு வீடாகச் சென்று இந்தப் புள்ளிவிவரத்தைச் சேகரித்துள்ளனா்.

மேலும், ‘குஜராத் நடைமுறை’யின் கீழ் தற்போது கரோனாவால் உயிரிழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கு ரூ. 50,000 மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், அவா்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்பட வேண்டும்.

பிரதமா் தனக்கான புதிய விமானத்தை வாங்க ரூ. 8,500 கோடி செலவு செய்ய முடிகிறது. மேலும், கரோனா சமயத்தில் ஒருசில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி வரி விலக்கு அளிக்க முடிகிறது. ஆனால், கரோனாவால் உயிரிழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசிடம் பணமில்லை.

காங்கிரஸ் கட்சி இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறது. முதலில், கரோனா உயிரிழப்புகள் குறித்த உண்மையான புள்ளிவிவரத்தை அரசு வெளியிட வேண்டும். கரோனாவால் உயிரிழப்பைச் சந்தித்த அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

குஜராத் மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆளும் பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com