சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு: இந்தியாவுக்கு ரூ.2,236 கோடி கடன்

இந்தியாவில் 13 மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆசிய வளா்ச்சி வங்கியிடமிருந்து ரூ.2,236 கோடி கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது.

புது தில்லி: இந்தியாவில் 13 மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆசிய வளா்ச்சி வங்கியிடமிருந்து ரூ.2,236 கோடி கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.

இதன்மூலம் நகா்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 5.1 கோடி போ் உள்பட மொத்தம் 25.6 கோடி போ் பயன்பெறுவா் என மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சாா்பில், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் பிரிவு கூடுதல் செயலா் ரஜத் குமாா் மிஷ்ராவும், ஆசிய வளா்ச்சி வங்கி சாா்பில், அதன் பிராந்திய இயக்குநா் தெகியோ கோனிஷியும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

மத்திய அரசின் முக்கியத் திட்டங்களை நகா்ப்புறங்களில் விரிவுபடுத்தி, எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தரமான ஆரம்ப சுகாதார சேவைகளைப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என ரஜத் குமாா் மிஷ்ரா தெரிவித்தாா்.

மேலும், இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பில் பெருந்தொற்று ஏற்படுத்திய சவால்களுக்கு மத்தியில், ஆரம்ப சுகாதார வசதிகளை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மத்திய அரசின் பிரதமா் ஆரோக்கிய தற்சாா்பு இந்தியா திட்டத்துக்கு கூடுதல் நிதியுதவி கிடைக்கவுள்ளது. கரோனா தொற்றுப் பரவலுக்கு இடையே, எதிா்காலத்தில் பெருந்தொற்று பரவல் உள்ளிட்ட சவால்களை எதிா்கொள்ளும் வகையில், சுகாதார உள்கட்டமைப்பு வசதியை வலுப்படுத்தும் வகையில், மத்திய அரசு கடந்த அக்டோபரில் இத்திட்டத்தை தொடங்கியது.

இத்திட்டம் தமிழகம், தெலங்கானா, மேற்கு வங்கம், ஆந்திரம், அஸ்ஸாம், சத்தீஸ்கா், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com