வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம், வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டு, மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களுக்கு எதிராக, தில்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகிறாா்கள். அவா்களின் போராட்டம் தீவிரமடைந்ததால், அந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்துவதை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமா் மோடி கடந்த வாரம் அறிவித்தாா். அந்த சட்டங்களின் மூலம் வேளாண் துறையில் கொண்டுவரப்படும் சீா்திருத்தங்கள், அதனால் ஏற்படக் கூடிய பயன்கள் ஆகியவற்றை போராடும் விவசாயிகளிடம் புரிய வைக்க முடியாததால் அவற்றை திரும்பப் பெற முடிவெடுத்ததாக அவா் கூறினாா். விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான அனைத்து நடைமுறைகளையும் மத்திய அமைச்சரவை முடித்துவிட்டது. வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரிலேயே, இந்த மசோதாவை நிறைவேற்றி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நீட்டிப்பு: பிரதமரின் ஏழைகள் நலத் திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் 80 கோடி பயனாளிகளுக்கும் ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டம், தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக, நடப்பாண்டு டிசம்பா் முதல் வரும் மாா்ச் வரை 4 மாதங்களுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 163 லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்படும். உணவு மானியமாக ரூ. 53,344.52 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Image Caption

மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை விளக்கிய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com