தடுப்பூசிகள் கிடைப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் காப்புரிமை; இந்தியாவின் திட்டம் என்ன?

ஐரோப்பிய ஒன்றியம் தலைமையில் வளர்ந்த நாடுகளான சுவிட்சர்லாந்து, பிரிட்டன் போன்றவை ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதை தடுப்பதாக இந்திய குற்றம்சாட்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அடுத்த வாரம் நடைபெறவுள்ள உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் கரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் மீதான அறிவுசார் சொத்து உரிமைகளுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்க வேண்டும் இந்தியா, தென்னாப்பிரிக்கா நாடுகள் கடந்தாண்டே கோரிக்கை விடுத்தது. ஆனால், உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் வளர்ந்த நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் முடங்கின.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் மூத்த அலுவலர் சியாம் மிஸ்ரா, "நவம்பர் 30ஆம் தேதி, ஜெனீவாவில் தொடங்கவுள்ள உலக வர்த்தக அமைப்பின் அமைச்சரவை மாநாட்டில், தனக்காக மட்டும் இந்தியா பேசபோவதில்லை. தன்னுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வளரும் நாடுகளுக்காகவும் பேசவுள்ளது. வளரும் நாடுகளின் நலன்கள் சமரசம் செய்யப்படாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஐரோப்பிய ஒன்றியம் தலைமையில் வளர்ந்த நாடுகளான சுவிட்சர்லாந்து, பிரிட்டன் போன்றவை ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதை தடுத்து நிறுத்துகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.

காப்புரிமைக்கு விலக்கு அளிப்பது குறித்து பேசிய உலக வர்த்தக அமைப்புக்கான சுவிட்சர்லாந்து நாட்டு தூதர் டிடியர் சாம்போவி, "எங்கள் நாடு சமரசத்திற்குத் தயாராக இருக்கிறது. ஆனால் முழு விலக்கு அளிப்பதற்கு எதிராக உள்ளோம்" என்றார்.

கடந்த வாரம் நடைபெற்ற, அறிவுசார் சொத்து உரிமை தொடர்பான கவுல்சில் கூட்டத்தில், அமைச்சரவை மாநாட்டில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றும் வரை பேச்சுவார்த்தைகளை நடத்த உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் ஒப்பு கொண்டுள்ளனர்.

மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் மாநாட்டில் கலந்து கொள்ளும் மூத்த அரசு அலுவலர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து கூறுகையில், "நியாயமான மற்றும் சமமான ஒப்பந்தத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும். ஒரு சில மருந்து நிறுவனங்களின் நலனுக்காக வளரும் நாடுகளில் உள்ள மக்களின் உயிரை பணயம் வைக்க முடியாது என்பதை வளர்ந்த நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com