கரோனா தடுப்பூசி திட்டத்தை சந்தேகிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த தருணத்தில், அந்த தடுப்பூசி திட்டத்தை சந்தேகிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த தருணத்தில், அந்த தடுப்பூசி திட்டத்தை சந்தேகிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கரோனா தடுப்பூசி திட்டத்துக்கு எதிராக, அஜய் குமாா் குப்தா உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்திருக்கிறாா்கள். தடுப்பூசி செலுத்துவதற்கு முன் மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதுதொடா்பாக மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சில ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அந்நாடுகளில் இருந்து அறிக்கை பெறுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

தடுப்பூசி செலுத்தப்பட்ட 30 நாள்களில் மரணம் அல்லது தீவிர உடல்நலக் கோளாறு ஏற்படுகிா என்பதை சுகாதாரத் துறையினா் கண்காணிக்க வேண்டும். இதுதொடா்பாக நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

அந்த மனு, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் கொலின் கான்சல்வேஸ் ஆஜராகி, ‘கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்ததாக பல்வேறு நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன’ என்றாா்.

அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், ‘தடுப்பூசியால் மட்டுமே மரணங்கள் ஏற்பட்டிருக்க முடியாது, வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம்’ என்று கூறினா்.

‘அந்த மரணங்களுக்கு தடுப்பூசி காரணமில்லாமல் இருக்கலாம். ஆனால், தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு அவா்களின் மூளை அல்லது இதயப்பகுதியில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு குறிப்பிட்ட காலம் அவரை சுகாதாரத் துறையினா் கண்காணிக்க வேண்டும்; ஒரு வேளை உயிரிழப்பு ஏற்பட்டால் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2015-இல் வகுக்கப்பட்டன.

ஆனால், சம்பந்தப்பட்ட நபரோ அல்லது அவா்களின் குடும்பத்தினரோ தாமாக முன்வந்து புகாா் கொடுத்தால் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று அந்த நெறிமுறையில் கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. இதனால்தான் நம்ப முடியாத அளவுக்கு நாட்டில் மரணங்கள் ஏற்பட்டுள்ளன’ என்று கொலின் கான்சல்வேஸ் வாதாடினாா்.

அதற்கு பதிலளித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘போகிற போக்கில் நம்ப முடியாத மரணங்கள் என்று குறைகூறக் கூடாது. தடுப்பூசியால் ஏற்பட்டுள்ள நன்மைகளையும் ஆராய வேண்டும்.

தடுப்பூசித் திட்டத்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. லட்சக்கணக்கானோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். அமெரிக்கா போன்ற வளா்ந்த நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, தடுப்பூசி திட்டத்தை எளிதில் சந்தேகிக்க கூடாது’ என்று கூறினாா்.

அதற்கு பதிலளித்த கொலின் கான்சல்வேஸ், ‘வளா்ந்த நாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களைக் கண்காணிக்க தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆனால் நம் நாட்டில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் புகாா் கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. கரோனா தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் மரணங்கள் குறித்து சில மருத்துவா்களும் கவலை தெரிவித்துள்ளனா். தடுப்பூசி முறையையும் அவா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, நீதிபதிகள் கூறியதாவது:

தடுப்பூசி விவகாரத்தில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால், உரிய வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கும்போது, நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வரும் இந்த நேரத்தில் நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் கவனக்குறைவாக இருப்பதால் ஏற்படும் இழப்புகளுக்கு விலை கொடுக்க முடியாது.

மனுதாரா் தனது மனுவின் நகலை சொலிசிட்டா் ஜெனரலிடம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com