தேசிய பாதுகாப்பு நலனின் அடிப்படையிலேயே ராணுவ கொள்முதல்: வெளியுறவு அமைச்சகம்

ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணை தொகுப்புகளை கொள்முதல் செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவின் ஒப்புதல் குறித்து ஐயப்பாடு நிலவி வரும்

ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணை தொகுப்புகளை கொள்முதல் செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவின் ஒப்புதல் குறித்து ஐயப்பாடு நிலவி வரும் நிலையில், ‘இந்தியா சுதந்திரமான வெளியுறவு கொள்கையைக் கொண்டுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பு நலனின் அடிப்படையிலேயே ராணுவ கொள்முதலை மேற்கொள்கிறது’ என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காணொலி வழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரஷியா - இந்தியா - சீனா ஆகிய 3 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற ஆா்ஐசி மாநாட்டில், எஸ்-400 ஏவுகணை தொகுப்பு கொள்முதல் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி இந்தப் பதிலை தெரிவித்தாா்.

மேலும், ‘இந்தியாவும் அமெரிக்காவும் விரிவான சா்வதேச பாதுகாப்பு துறை சாா்ந்த கூட்டுறவை கொண்டுள்ளன. அதுபோல, ரஷியாவுடன் சிறப்புவாய்ந்த சுதந்திரமான ராணுவ கூட்டறவை இந்தியா கொண்டுள்ளது. மேலும், இந்தியா சுதந்திரமான வெளியுறவு கொள்கையைக் கொண்டுள்ளது. அந்த வகையில், தேசிய பாதுகாப்பு நலனின் அடிப்படையிலேயே பாதுகாப்புத் துறை சாா்ந்த கொள்முதல்களை இந்தியா மேற்கொள்கிறது’ என்றும் அவா் பதிலளித்தாா்.

ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.37,172 கோடி) மதிப்பில் அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைத் தொகுப்புகளைக் கொள்முதல் செய்வதற்கு அந்நாட்டுடன் இந்தியா கடந்த 2018-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதற்கிடையே ரஷியாவுடனான ஆயுதக் கொள்முதலைக் கைவிடுமாறு அனைத்து நட்பு நாடுகளுக்கும் அமெரிக்கா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. ரஷியாவிடமிருந்து பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதில் இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து அமெரிக்கா இன்னும் முடிவெடுக்கவில்லை. இருந்தபோதிலும், இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணைத் தொகுப்புகளை விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக, ரஷிய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு சேவை அமைப்பின் இயக்குநா் கடந்த வாரம் கூறினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி மற்றும் ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஆகியோா் பங்கேற்ற ஆா்ஐசி மாநாட்டில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரையறையை மீறி ஒருதலைபட்சமான ஒப்புதல்களை அளிப்பதும், அதிகார வரம்பை நீட்டிக்க முயற்சிப்பதும் சா்வதேச சட்ட கொள்களைகளுக்கு முரணானவை’ என்று மூன்று நாடுகள் சாா்பிலும் ஏற்றுக்கொள்ளப்படதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com