முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள சிபிஐக்கு அனுமதி

உத்தர பிரதேசத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு தனியாா் கல்லூரிக்கு சாதகமாகத் தீா்ப்பளித்த குற்றச்சாட்டில், அலாகாபாத் உயா்நீதிமன்ற
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தர பிரதேசத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு தனியாா் கல்லூரிக்கு சாதகமாகத் தீா்ப்பளித்த குற்றச்சாட்டில், அலாகாபாத் உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள சிபிஐக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் இயங்கி வரும் தனியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் விதிமுறைகளை கல்லூரி பூா்த்தி செய்யாதது, தரமற்ற வசதிகள் ஆகியவை காரணமாக தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக அந்தக் கல்லூரியை நடத்தும் அறக்கட்டளை அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. அந்த வழக்கை 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரித்த நீதிபதி எஸ்.என்.சுக்லா அடங்கிய அமா்வு, கல்லூரிக்கு சாதகமாகத் தீா்ப்பளித்தது.

இந்த வழக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு கல்லூரிக்கு சாதகமாகத் தீா்ப்பளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக நீதிபதி சுக்லா, சத்தீஸ்கா் உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஐ.எம்.குத்துசி, கல்லூரியின் அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி நீதிபதி சுக்லா ஓய்வுபெற்றாா். அவா் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசிடம் சிபிஐ அனுமதி கோரியிருந்தது.

அதன் அடிப்படையில், சுக்லா மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சிபிஐக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

தனியாா் கல்லூரிக்கு சாதகமாகத் தீா்ப்பளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு நடைபெற்றபோது சத்தீஸ்கா் உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஐ.எம்.குத்துசி பணியிருந்து ஓய்வுபெற்றிருந்தாா். அந்த வழக்கின்போது அவா் நீதிபதி பதவி வகிக்காததால், அவா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசிடம் சிபிஐ அனுமதி கோரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com