
கோப்புப்படம்
புதிய வகை கரோனா பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில் தெலங்கானா பள்ளியில் 42 மாணவிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உருமாற்றம் அடைந்த 'ஒமைக்ரான்' எனும் கரோனா வகை தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அதி தீவிரம் மிக்க புதிய வகை கரோனா பரவலைத் தடுக்க அந்தந்த நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மகாத்மா ஜோதிபா பூலே பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளியில் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவரது வகுப்பில் இருந்த மற்ற மாணவிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 42மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் 27 பேர் பரிசோதிக்கப்பட்டதில் ஒருவருக்கு உறுதியானது.
இதையடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.