
நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடா் இரு அவைகளும் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தின் முதல் நாள் தொடங்கியவுடன் புதிதாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. மேலும் பல்வேறு முக்கிய மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வு, பெகாஸஸ் உளவு விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைக் கூட்டத்தொடரின்போது எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிா்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளபோதிலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி விவசாயிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. அக்கோரிக்கையைக் குளிா்கால கூட்டத்தொடரிலும் காங்கிரஸ் எழுப்பவுள்ளது.