
பொதுமுடக்கம் அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை: அமைச்சர் கே.சுதாகர்
பெங்களூரு: பொதுமுடக்கம் அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கரோனா பெருந்தொற்றின் புதியவகை ஒமைக்ரான் தீநுண்மி 4 நாடுகளில் மட்டும் காணப்பட்டது. தற்போது ஒமைக்ரான் தீநுண்மி 12 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மாநில அரசும் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. ஒமைக்ரான்: டெல்டா-வை விட 6 மடங்கு பரவும் திறன்; தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும்
கரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் தீநுண்மி பரவலை தடுப்பது குறித்து மூத்த அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவினருடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். ஒமைக்ரான் தீநுண்மி பரவலை தடுக்க மாநில அரசு வழங்க வேண்டிய வழிகாட்டுதல்கள், அதை எவ்வகையில் அமல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
கரோனாவால் மக்கள் நிம்மதியை இழந்து தவித்துவருகிறார்கள். பலவகைகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை மக்கள் அனுபவித்துள்ளனர். எனவே, மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தக்கூடாது. கரோனா தொடர்பாக தவறான தகவல்களை சமூகவலைத்தளங்கள் வாயிலாக மக்களிடையே பரப்பக்கூடாது. கரோனாவை காரணம் காட்டி பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. எனவே, பொதுமுடக்கம் அமல்படுத்தும் என்பது போன்ற பொய்யான செய்திகளை பரப்பக்கூடாது. ஆனால், தீநுண்மி தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு அளிப்போம்.
இதையும் படிக்கலாமே.. ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள்: வானிலை மையம்
புதியவகை கரோனா ஒமைக்ரான் தீநுண்மி, டெல்டா தீநுண்மியை போல ஆபத்தானது அல்ல என்று ஒருசில மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஒமைக்ரான் தீநுண்மியின் மரபணு வரிசைமுறையை(ஜெனோம் சீக்வென்சிங்) ஆராய்ந்தபிறகு, அதன் ஆபத்து குறித்து தெளிவான பார்வை கிடைக்கும். டிச.1-ஆம் தேதிக்கு பிறகு ஒமைக்ரான் குறித்த முழுமையான ஆய்வுமுடிவுகள் தெரியவரும் என்றார் அவர்.