ஒட்டு மொத்த நகரின் குரல் வளையும் நசுக்கப்பட்டுள்ளது: விவசாயிகள் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து

தில்லி ஜந்தர் மந்தரில் சத்தியகிராக போராட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி கிசான் மகாபஞ்சாயத் என்ற விவசாய சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மூன்று வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கங்களை விமரிசித்துள்ள உச்ச நீதிமன்றம், "ஒட்டு மொத்த நகரி்ன் (தில்லி) குரல் வளையையும் நசுக்கி நெடுஞ்சாலைகளை முடக்கியுள்ளீர்கள்" என தெரிவித்துள்ளது.

தில்லி ஜந்தர் மந்தரில் சத்தியகிராக போராட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி கிசான் மகாபஞ்சாயத் என்ற விவசாய சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. குறைந்தபட்சம் 200 விவசாயிகள் அமைதியான அறவழியில் போராட்டத்தை நடத்த அதற்கு ஏற்ற இடத்தை வழங்க சம்பந்தப்பட்ட அமைப்புக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஏ.எம்.  கான்வில்கர், சி.டி. ரவிக்குமார் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, "ஒட்டு மொத்த நகரின் குரல் வளையையும் நசுக்கியுள்ளீர்கள். தற்போது, நகரின் உள்ளே வர விரும்புகிறீர்கள். அதை சுற்றி வாழும் மக்கள், உங்களின் போராட்டத்தால் மிகழ்ச்சி அடைந்திருகிறார்களா? இது முடிவுக்கு வர வேண்டும்.

நெடுஞ்சாலையை முடக்கி போராட்டம் அமைதியாக நடைபெறுவதாக கூறுகிறீர்கள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல குடிமக்களுக்கும் உரிமை உண்டு. அவர்களின் பொருள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பாதுகாப்பு வீரர்களையும் நிறுத்தியுள்ளீர்கள்" என்றார்.

ஜூலை மாதம், சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் ஆகிய விவசாய அமைப்புகள், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்ட தொடர் நடைபெற்று வந்த நிலையில், ஜந்தர் மந்தரில் மாபெரும் போராட்டம் நடத்தினர். மூன்று வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாக போராட்டம் நடத்திவருகின்றனர். 

பிரச்னையை சுமூகமாக தீர்க்க, அரசுக்கும், விவசாயிகளுக்குமிடையே 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தது. கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக விவசாயி சட்டங்கள் அமைந்துள்ளதாக விவசாயிகள் குற்றசாட்டிவருகின்றனர். 

குறிப்பாக, குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் சிலரின் செயல்களால் வன்முறையில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com