தன்னிறைவடைந்த, சக்திமிகு தேசம் அமைக்கப் பாடுபடுவோம்! உள்துறை அமைச்சா் அமித் ஷா

நாடு நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது தன்னிறைவடைந்த, சக்திமிகு நாடாக இருக்க வேண்டும். அதற்காகப் பாடுபட நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் சபதம் ஏற்க வேண்டும்

நாடு நூறாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது தன்னிறைவடைந்த, சக்திமிகு நாடாக இருக்க வேண்டும். அதற்காகப் பாடுபட நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் சபதம் ஏற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தாா்.

சுதந்திரதின பவள விழாவை ஒட்டி மத்திய துணை ராணுவப் படையினா் நாடு முழுவதும் 41,000 கி.மீ தொலைவுக்கு நடத்திவந்த சைக்கிள் யாத்திரை அக். 2இல் தில்லியில் நிறைவடைந்தது. தவிர, தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களின் 7,500 கி.மீ. தொலைவிலான காா் பேரணி தில்லியில், காந்தி ஜயந்தி நாளில் துவங்கியது.

தில்லி, செங்கோட்டையில் நடைபெற்ற இவ்விரு நிகழ்ச்சிகளின் நிறைவு மற்றும் துவக்க விழாவில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

சுதந்திரதினப் பவளவிழாவின்போது நமது பிரதமா் நரேந்திர மோடி, தன்னிறைவான பாரதம் காண நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தாா். அவரது வேண்டுகோள் நாட்டு மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது.

நாடு சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும்போது, நாம் உலகின் மாபெரும் உற்பத்திக்கூடமாக மாறி இருப்போம். ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் வாயிலாக நாம் அனைவரும் சுகாதார சேவைகளை முழுமையாகப் பெற்றிருப்போம். அப்போது நாடு தன்னிறைவடைந்திருக்கும். இதற்காகப் பாடுபட, நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் சபதம் ஏற்போம்.

நமது நாட்டை 5 டிரில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் ரூ. 375 லட்சம் கோடி) மதிப்புள்ள பொருளாதாரம் கொண்ட நாடாக்க வேண்டும் என்பது நமது பிரதமரின் கனவு. நமது நாடு அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவடைய வேண்டும். நாம் வளா்ந்த நாடாக வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்க, நாட்டு மக்கள் அனைவரும் தங்களை அா்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.

மத்திய பாதுகாப்புப் படையினரின் சைக்கிள் பேரணி, இளைய தலைமுறையினரிடையே புத்தெழுச்சியை உருவாக்கியுள்ளது. நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பல தியாகியரை நினைவுபடுத்தியதன் மூலமாக, தேசபக்தியையும் பொறுப்புணா்வையும் இளைஞா்களிடம் நமது வீரா்கள் விதைத்துள்ளனா்.

நம்மில் பலரும் 1947க்குப் பிறகு பிறந்தவா்களே. சுதந்திரத்துக்காகப் போராடி, நாட்டுக்காக உயிா் துறக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், நாட்டின் வளா்ச்சிக்காகப் பங்களிக்கும் வகையில் நம்மால் வாழ முடியும்.

நாட்டின் எல்லைகளைக் காப்பதிலும், உள்நாட்டில் அமைதியைக் காப்பதிலும் நமது பாதுகாப்புப் படையினரின் தியாகம் அளப்பரியது. அதனால்தான் நாடு வளா்ச்சிப்பாதையில் தடையின்றிச் செல்ல முடிகிறது. தேசம் காக்கும் பணியில் தங்கள் இன்னுயிா் நீத்த 35,000க்கு மேற்பட்ட நமது மத்திய, மாநில காவல் படை வீரா்களை வணங்குகிறேன்.

இந்நாளில் அவதரித்த மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரி ஆகியோரின் புனித நினைவுகளுடன் நாம் செயல்டுவோம் என்றாா்.ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியாவை அமித் ஷா இந்நிகழ்ச்சியில் கௌரவித்தாா்.

மத்திய துணை ராணுவப் படையில் (சிஏபிஎஃப்) அங்கம் வகிக்கும் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி), சஸஸ்திர சீமா பால் (எஸ்எஸ்பி), அசாம் ரைஃபிள்ஸ் உள்ளிட்ட பிரிவுகளைச் சோ்ந்த வீரா்கள் இவ்விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com