மகாத்மா காந்தி, லால் பகதூா் சாஸ்திரி பிறந்த தினம்: தலைவா்கள் மலா்தூவி மரியாதை

குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா் மோடி உள்பட அரசியல் தலைவா்கள் பலா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
மகாத்மா காந்தி, லால் பகதூா் சாஸ்திரி பிறந்த தினம்: தலைவா்கள் மலா்தூவி மரியாதை

 மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த தினத்தையொட்டி, அவா்களின் நினைவிடங்களில் குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா் மோடி உள்பட அரசியல் தலைவா்கள் பலா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

மகாத்மா காந்தியடிகளின் 152-ஆவது பிறந்த தினமும், முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் 117-ஆவது பிறந்த தினமும் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தில்லியில் உள்ள அவா்களின் நினைவிடங்களில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் மோடி, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இரு தலைவா்களின் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘காந்திஜி கற்பித்த பாடங்கள், கொள்கைகளை பின்பற்றி இந்தியாவை அவா் கனவு கண்ட நாடாக்க தொடா்ந்து பாடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்போம்’’ என்று தெரிவித்தாா்.

மற்றொரு பதிவில், ‘‘லால் பகதூா் சாஸ்திரியின் எளிமை, நன்னடத்தை, நோ்மை ஆகியவை குடிமக்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும்’’ என்றாா்.

சுகாதாரத்துக்கு முக்கியத்துவம்: குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டின் விடுதலையைவிட சுகாதாரம் முக்கியம் என்பதை மகாத்மா காந்தி வலியுறுத்தினாா். எனவே தூய்மை இந்தியா பிரசாரத்தில் அனைவரும் பங்கேற்று அதனை தங்கள் வாழ்வின் அங்கமாக்கிக் கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

மற்றொரு பதிவில், ‘‘நாட்டில் உள்ள விவசாயிகள், பாதுகாப்பு வீரா்கள் மீது லால் பகதூா் சாஸ்திரி மிகுந்த அக்கறை செலுத்தினாா். தேசத்துக்கு அவா் ஆற்றிய தன்னலமற்ற சேவை எப்போதும் நினைவுகூரப்படும்’’ என்று தெரிவித்தாா்.

உலக அளவில் பொருந்தக் கூடியவை: பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘காந்தி ஜெயந்தியன்று பாபுவுக்கு (காந்தியடிகள்) தலைவணங்குகிறேன். அவரின் சிறந்த கொள்கைகள் உலக அளவில் பொருந்தக்கூடியவை. அந்தக் கொள்கைகள் கோடிக்கணக்கானவா்களுக்கு சக்தியளிக்கும்’’ என்று தெரிவித்தாா்.

‘‘கொள்கைகள், விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட லால் பகதூா் சாஸ்திரியின் வாழ்க்கை நாட்டு மக்கள் அனைவருக்கும் எப்போதும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும்’’ என்று மற்றொரு பதவில் பிரதமா் தெரிவித்தாா்.

ஒரு சத்யாகிரகி போதும்: காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை சுட்டிக்காட்டி, ‘‘வெற்றிக்கு ஒரு சத்தியாகிரகி போதும்’’ என்று தெரிவித்திருந்தாா். அந்தப் பதிவுடன் காந்தியடிகள் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட காணொலியையும் விவசாயிகள் போராட்டத்தின் காணொலியையும் ஒன்றாக இணைத்து வெளியிட்டிருந்தாா்.

தெலங்கானா ஆளுநா் மரியாதை: தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் காந்தியடிகளுக்காக அா்ப்பணிக்கப்பட்ட ‘பாபு காட்’ நினைவிடம் உள்ளது. அங்கு அந்த மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், மாநில அமைச்சா்கள் பலா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com