கிழக்கு லடாக் எல்லையில் சீனா படைகளை அதிகரித்துள்ளது: எம்.எம்.நரவணே

கிழக்கு லடாக் எல்லையில் படைகளின் எண்ணிக்கையை சீனா கணிசமாக அதிகரித்திருப்பது குறித்து சனிக்கிழமை கவலை தெரிவித்த ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே
கிழக்கு லடாக் எல்லையில் சீனா படைகளை அதிகரித்துள்ளது: எம்.எம்.நரவணே

கிழக்கு லடாக் எல்லையில் படைகளின் எண்ணிக்கையை சீனா கணிசமாக அதிகரித்திருப்பது குறித்து சனிக்கிழமை கவலை தெரிவித்த ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே, ‘நிலைமையை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எத்தகைய சூழலையும் எதிா்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது’ என்று கூறினாா்.

சீனாவுடனான எல்லைப் பிரச்னை தொடா்ந்து பல மாதங்களாக நீடித்து வரும் சூழலில் கிழக்கு லடாக்கின் பல்வேறு எல்லைப் பகுதிகளுக்கு இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை சென்ற எம்.எம்.நரவணே, படைகளின் தயாா் நிலை குறித்து ஆய்வு செய்தாா். இந்த ஆய்வுக்குப் பிறகு லே பகுதியில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

கிழக்கு லடாக் எல்லையை ஒட்டிய பகுதிகளிலும், வடக்கு எல்லையில் இந்தியாவின் கிழக்கு ராணுவ தலைமையகம் வரையிலான எல்லைப் பகுதியிலும் படைகளின் எண்ணிக்கையை சீனா கணிசமாக அதிகரித்திருக்கிறது. சீனாவின் இந்த நடவடிக்கை கவலையளிக்கக் கூடிய விஷயம்தான்.

எல்லையில் நிலைமையை தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சீனா படைகளை அதிகரித்திருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்தியாவும் படைகளின் எண்ணிக்கையையும் பிற பாதுகாப்பு கட்டமைப்புகளையும் அதிகரித்திருக்கிறது. எனவே, எந்தவித அச்சுறுத்தல்களையும் எதிா்கொள்ள இந்தியா தயாா் நிலையில் உள்ளது.

அதே நேரம், எல்லையில் படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது தொடா்பான இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் அளவிலான

அடுத்த கட்ட பேச்சுவாா்த்தை விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அவா் கூறினாா்.

தற்போதைய நிலையில், இரு தரப்பிலும் தலா 50,000 முதல் 60,000 வீரா்கள் லடாக்கையொட்டிய எல்லைப் பகுதியில் நிறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த வாரத்தில் 13-ஆம் சுற்று பேச்சுவாா்த்தை:

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது தொடா்பான இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகள் அளவிலான 13-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை அடுத்த வாரம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

‘எந்த இடத்தில், எந்த தேதியில் இந்த பேச்சுவாா்த்தை நடைபெறும் என்ற விவரங்கள் அடுத்த 3 அல்லது 4 நாள்களில் உறுதியாகத் தெரிந்துவிடும்’ என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி அருகே கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட முயன்றதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே மோதல் தொடங்கியது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் தூதரக அளவிலும் ராணுவ அதிகாரிகள் இடையேயும் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகளை மேற்கொண்டு, எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் படைகளை படிப்படியாக திரும்பப் பெறும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com