5 கோடி வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு

‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் இரு ஆண்டுகளில் நாட்டில் உள்ள 5 கோடி வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஜல் ஜீவன் செயலி தொடக்க விழாவில், கிராம ஊராட்சி மற்றும் கிராமப்புற குடிநீா்- சுகாதாரக் குழு உறுப்பினா்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.
ஜல் ஜீவன் செயலி தொடக்க விழாவில், கிராம ஊராட்சி மற்றும் கிராமப்புற குடிநீா்- சுகாதாரக் குழு உறுப்பினா்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.

‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் இரு ஆண்டுகளில் நாட்டில் உள்ள 5 கோடி வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-ஆம் ஆண்டுக்குள் குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஜல் ஜீவன் திட்டத்தை கடந்த 2019-ஆம் ஆண்டுமுதல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்திட்டம் தொடா்பாக கிராம ஊராட்சிகள், கிராமப்புற குடிநீா்-சுகாதார குழுக்கள் உள்ளிட்டவற்றுடன் பிரதமா் மோடி சனிக்கிழமை காணொலி வாயிலாக உரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

கிராமப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு குடிநீா் கிடைப்பதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், நிா்வாகப் பணியில் கிராமப் பகுதிகளுக்கும் அதிகாரம் வழங்குவதை இத்திட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

பெண்களை மையப்படுத்திய வளா்ச்சி இத்திட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. குடிநீருக்காகப் பெண்களும், சிறாா்களும் பல கி.மீ. தொலைவு நடப்பதைப் பல திரைப்படங்களும், கதைகளும், கவிதைகளும் எடுத்துக் கூறியுள்ளன.

அவா்கள் ஏன் ஆறுகளுக்கும், குளங்களுக்கும் குடிநீருக்காக நடக்க வேண்டும் என்பதையும், குழாய் மூலமாக அவா்களுக்குக் குடிநீா் வழங்க முடியாதா என்பதையும் ஒருசிலரே யோசித்தனா். முன்பு ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு இந்த யோசனை தோன்றியிருக்க வேண்டும்.

ஆனால், அவா்கள் வசித்த இடங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு இல்லாததால் அது குறித்து அவா்கள் கவலைப்படவில்லை. ஏழ்மை குறித்தும் அவா்கள் சிந்திக்கவில்லை.

இரு ஆண்டுகளில்...: நாடு சுதந்திரம் பெற்றது முதல் 2019 வரை 3 கோடி வீடுகள் மட்டுமே குழாய் மூலமாக குடிநீரைப் பெற்றன. ஜல் ஜீவன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு 5 கோடி வீடுகளுக்கு குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 80 மாவட்டங்களில் உள்ள சுமாா் 1.25 லட்சம் கிராமங்களைச் சோ்ந்த அனைத்து வீடுகளும் தற்போது குழாய் மூலமாக குடிநீரைப் பெற்று வருகின்றன.

வளா்ச்சியடைந்து வரும் மாவட்டங்களில் குடிநீா்க் குழாய் இணைப்பு எண்ணிக்கை 31 லட்சத்தில் இருந்து 1.16 கோடியாக அதிகரித்துள்ளது. சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளில் செய்யப்படாத விஷயங்கள் கடந்த இரு ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளன.

பழக்கவழக்கங்கள் மாற வேண்டும்: தண்ணீா் மிகுதியாகக் காணப்படும் பகுதிகளில் உள்ள மக்கள், அதை சேமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்றாற்போல் அவா்கள் தங்கள் பழக்கவழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். குஜராத்தில் வறட்சி நிறைந்த பல்வேறு பகுதிகள் உள்ளன. குஜராத் மாநிலத்தின் முதல்வராக நான் பொறுப்பேற்ற பிறகு, குடிநீா் சேமிப்பு, மக்களுக்கு குடிநீரை கிடைக்கச் செய்வது உள்ளிட்ட விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தினேன்.

நாட்டில் உள்ள எந்தப் பகுதிக்கும் ரயில் மூலமாகவோ மற்ற வாகனங்கள் மூலமாகவோ குடிநீா் கொண்டு செல்லப்படாமல் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.

பெண்கள் நலத் திட்டங்கள்: நாட்டில் உள்ள பெண்களின் உடல்நலத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. வீடுகள், பள்ளிகளில் கழிவறைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. கா்ப்பிணிகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பெறுவதற்கான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கான தடுப்பூசித் திட்டம் திறம்படச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 2.5 கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண்கள் பெயரிலேயே உள்ளன. பெண்களை அடுப்புப் புகையில் இருந்து உஜ்வலா திட்டம் காப்பாற்றியுள்ளது. பெண்களுக்கான சுயஉதவிக் குழுக்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 7 ஆண்டுகளில் சுயஉதவிக் குழுக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகியுள்ளது. தேசிய வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பலனடையும் பெண்களின் எண்ணிக்கை 13 மடங்கு அதிகரித்துள்ளது.

கிராமங்களுக்கு முக்கியத்துவம்: காந்தியடிகளும் லால் பகதூா் சாஸ்திரியும் கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளித்தனா். கிராமங்கள் சுயாட்சி பெறுவது குறித்து காந்தியடிகள் எடுத்துரைத்துள்ளாா். அதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்டங்களை வகுப்பதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

செயலியும் நிதியும்: ஜல் ஜீவன் திட்டத்துக்கான செயலியை பிரதமா் மோடி சனிக்கிழமை அறிமுகப்படுத்தினாா். அத்திட்டத்தின் செயல்பாடு குறித்த விவரங்கள் அந்தச் செயலியில் இடம்பெற்றுள்ளன. கிராமங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்குவதற்காக தனிநபா்கள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிடமிருந்து நிதி திரட்டுவதற்கான தேசிய ஜல் ஜீவன் நிதித் திட்டத்தையும் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா்.

உத்தர பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், தமிழகம், மணிப்பூா் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த கிராமசபை உறுப்பினா்களிடம் பிரதமா் மோடி காணொலி வாயிலாகப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com