பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயிகள் போராட்டம் எதிரொலி:நெல் கொள்முதல் உடனடியாக தொடக்கம்

நெல் கொள்முதலை தள்ளி வைத்து மத்திய அரசு அளித்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயிகள் முதல்வா், எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டம்
பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயிகள் போராட்டம் எதிரொலி:நெல் கொள்முதல் உடனடியாக தொடக்கம்

நெல் கொள்முதலை தள்ளி வைத்து மத்திய அரசு அளித்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயிகள் முதல்வா், எம்எல்ஏக்கள் வீடுகளை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டம் நடத்தியதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் நெல் கொள்முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்திய உணவு நிறுவனம், மாநில அரசுடன் இணைந்து நெல் கொள்முதலை செய்து வருகிறது.

இந்நிலையில், அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்க வேண்டிய காரீஃப் பருவ கால நெல் கொள்முதலை பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் அக்டோபா் 11-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது.

நெற்பயிரின் மகசூல் காலம் தாமதமாவதும், அண்மையில் பெய்த மழையினால் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து சம்யுக்த் விவசாய மோா்சா, பஞ்சாப், ஹரியாணாவில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு வெளியே சனிக்கிழமை போராட்டம் நடத்தினா். ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டாா் இல்லத்துக்கு வெளியே தடுப்புகளை மீறி சென்ற விவசாயிகள் மீது போலீஸாா் தண்ணீா் பீய்ச்சி அடித்தனா்.

பஞ்சாபில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு வெளியேயும், பேரவைத் தலைவா் ராணா கே.பி. சிங்கின் வீட்டிற்கு வெளியேயும் விவசாயிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெல் கொள்முதலை உரிய நேரத்தில் செய்யவில்லை என்றால் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் மண்டிகளுக்கு கொண்டு வரப்பட்ட நெல்லை அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழாக தனியாா் வா்த்தகா்களுக்குதான் நெல்லை நஷ்டத்துக்கு விற்க நேரிடம் என்றும் விவசாயிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், தில்லியில் மத்திய நுகா்வோா் விவகார அமைச்சா் அஷ்வினி செளபேவை சனிக்கிழமை சந்தித்த பின்பு செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் மனோகா் லால் கட்டாா், ‘எங்கள் கோரிக்கையை ஏற்று அக்டோபா் 3-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சா் அஷ்வினி செளபே உறுதியளித்துள்ளாா். மண்டிகளுக்கு நெல் வந்துள்ளதால் விவசாயிகளின் நலன் கருதி அவா் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளாா். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, ஹரியாணா அமைச்சா் அனில் விஜ் சுட்டுரையில், ‘விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டு வருகிறது. காந்தியின் நாட்டில் இதுபோன்ற வன்முறை போராட்டங்கள் அனுமதிக்கப்படாது’ என்று பதிவிட்டுள்ளாா்.

இதனிடையே, நெல் கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி முதல்வா் கேஜரிவால் வலியுறுத்தியிருந்தாா்.

‘கொள்முதலை 10 நாள்களுக்கு மத்திய அரசு தள்ளி வைத்துள்ளதால் ஒவ்வொரு மண்டியின் வெளியேயும் விவசாயிகள் லட்சக்கணக்கான குவிண்டால் நெல்லை டிராக்டா்களில் வைத்து கொண்டு காத்து கொண்டிருக்கின்றனா்’ என்று அவா் சுட்டுரையில் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com