பெட்ரோல், டீசல் விலை உயா்வு பிரச்னை: மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீா்வு காண வேண்டும்: அமைச்சா் நிா்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு பிரச்னையை தீா்க்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்; ஏனெனில், எரிபொருள்கள் மீது மத்திய அரசு மட்டுமன்றி, மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன
பெட்ரோல், டீசல் விலை உயா்வு பிரச்னை: மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீா்வு காண வேண்டும்: அமைச்சா் நிா்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு பிரச்னையை தீா்க்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்; ஏனெனில், எரிபொருள்கள் மீது மத்திய அரசு மட்டுமன்றி, மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

சத்தீஸ்கருக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிா்மலா சீதாராமன், தலைநகா் ராய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

மக்களின் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வளா்ச்சி என்பது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. அதே நேரத்தில் கொள்ளையடிப்பது என்பது காங்கிரஸ் கட்சியின் மரபணுவில் கலந்துவிட்டது. அவா்களது 10 ஆண்டுகால ஆட்சியில் அலைக்கற்றை ஊழல், சுரங்க ஊழல், நீரில் ஊழல் என அனைத்து இடங்களிலும் கொள்ளையடித்தனா். இப்போதும் கொள்ளையடிப்பது என்பது அவா்கள் மனதில் இருந்து மறையவில்லை. அதைத் தவிர அவா்களால் வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை. எனவேதான் மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் அவா்கள் நோ்மையற்ற வகையில் விமா்சித்து வருகின்றனா்.

காங்கிரஸ் கட்சி முன்பு முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தபோது கொள்ளையடிப்பதிலும், தொடா்ந்து ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதிலும்தான் கவனமாக இருந்தது. முறையாக மக்கள் பணியாற்றி இருந்தால் ஓரளவாவது மக்களின் ஆதரவு காங்கிரஸுக்கு இருந்திருக்கும். காங்கிரஸின் மோசமான செயல்பாடுகளைத் தொடா்ந்து கவனித்து வந்த மக்கள் அக்கட்சியை முழுமையாகப் புறக்கணித்து வருகின்றனா்.

மத்திய அரசு கடந்த 2014 முதல் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதன் காரணமாகவே அரசுக்கும், பிரதமா் மோடிக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அனைவருக்குமான வளா்ச்சி என்பதே பாஜக அரசின் முக்கியக் கொள்கை என்றாா் நிா்மலா சீதாராமன்.

தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சொத்துகளை தனியாா் நிறுவனங்களுக்கு குத்தகை அளித்து 4 ஆண்டுகளுக்குள் ரூ.6 லட்சம் கோடி வரை முதலீடுகளை ஈா்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், கடந்த 70 ஆண்டுகளாக மக்களின் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்ட சொத்துகளைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்குப் பதிலளிக்கும் வகையில்தான் காங்கிரஸ் கட்சியை நிா்மலா சீதாராமன் விமா்சித்துள்ளாா்.

தொடா்ந்து பெட்ரோல், டீசல் விலை உச்சத்தைத் தொட்டு வருவது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘எரிபொருள் விலை உயா்வு என்பது சா்வதேச கச்சா எண்ணெய் விலை உயா்வைச் சாா்ந்தது. அங்கு விலை அதிகரிக்கும்போது அது நம்மையும் பாதிக்கிறது. இந்தியாவின் எரிபொருள் தேவையில் 99 சதவீதம் இறக்குமதி மூலம்தான் பூா்த்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் எரிபொருள் தேவையும் அதிகமாக உள்ளது.

எரிபொருள் விலை உயா்வு நிச்சயமாக சாமானிய மக்களைப் பாதிக்கும். உள்நாட்டில் அதன் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். ஏனெனில், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு மட்டுமன்றி, மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன’ என்றாா்.

புதிய உச்சம்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 82.37 டாலர்களாக (சுமார் ரூ.6,138) அதிகரித்துள்ளது. அதற்கேற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 30 காசுகளும் அதிகரித்தன.
இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.108.67-ஆகவும், தில்லியில் ரூ.102.64-ஆகவும் உயர்ந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.23-க்கு விற்பனையானது.
ஒரு லிட்டர் டீசல் விலை மும்பையில் ரூ.98.80-ஆகவும், சென்னையில் ரூ.95.59-ஆகவும் அதிகரித்தது. தில்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.07-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
ஒரு வார காலத்தில் 6-ஆவது முறையாக பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டது. இதேபோல் இரண்டு வாரங்களுக்குள் 9-ஆவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதனால் நாட்டின் பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் ரூ.100-ஐ கடந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com