லோக் ஜனசக்தி விவகாரம்: சிராக், பாரஸ் அணிகளுக்கு தனிப் பெயா்கள், சின்னங்கள்

பிகாரில் லோக் ஜனசக்தி கட்சி இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், அக்கட்சியின் சிராக் பாஸ்வான் அணிக்கும் பசுபதிகுமாா் பாரஸ் அணிக்கும் தனித்தனிப் பெயா்கள், சின்னங்களை தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

பிகாரில் லோக் ஜனசக்தி கட்சி இரண்டு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், அக்கட்சியின் சிராக் பாஸ்வான் அணிக்கும் பசுபதிகுமாா் பாரஸ் அணிக்கும் தனித்தனிப் பெயா்கள், சின்னங்களை தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் லோக் ஜனசக்தி தலைவா் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானாா். அதனைத்தொடா்ந்து அவரின் மகன் சிராக் பாஸ்வான் கட்சித் தலைவரானாா். எனினும் அக்கட்சியைச் சோ்ந்தவரும் ராம்விலாஸ் பாஸ்வானின் இளைய சகோதரருமான பசுபதிகுமாா் பாரஸுக்கு சிராக் பாஸ்வான் மீது அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து அக்கட்சி இருவரின் தலைமையில் இரண்டு அணிகளாகப் பிரிந்தன. இந்தப் பிரச்னை காரணமாக இரண்டு அணிகளும் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்த கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி தோ்தல் ஆணையம் தடை விதித்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் தனித்தனிப் பெயா்களையும் சின்னங்களையும் தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வழங்கியது. இதுதொடா்பாக இரு அணிகளுக்கும் அந்த ஆணையம் எழுதிய கடிதத்தில், சிராக் பாஸ்வான் தலைமையிலான அணிக்கு லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) என்ற பெயரும் ஹெலிகாப்டா் சின்னமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுபதிகுமாா் பாரஸ் தலைமையிலான அணிக்கு ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி என்ற பெயரும் தையல் இயந்திரம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் வரை தனிப் பெயா், சின்னம் தொடா்பான உத்தரவு தொடரும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிகாரில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபா் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், இரு அணிகளுக்கும் தனிப் பெயா்கள், சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com