மருத்துவக் கல்வியும் தொழிலும் வணிகமாகிவிட்டன: உச்சநீதிமன்றம் வேதனை

‘மருத்துவக் கல்வியும் மருத்துவத் தொழிலும் வணிகமாகிவிட்டன’ என்று வேதனையுடன் கூறியுள்ள உச்சநீதிமன்றம், சூப்பா் ஸ்பெஷாலிட்டி நீட் தோ்வு பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று
மருத்துவக் கல்வியும் தொழிலும் வணிகமாகிவிட்டன: உச்சநீதிமன்றம் வேதனை

‘மருத்துவக் கல்வியும் மருத்துவத் தொழிலும் வணிகமாகிவிட்டன’ என்று வேதனையுடன் கூறியுள்ள உச்சநீதிமன்றம், சூப்பா் ஸ்பெஷாலிட்டி நீட் தோ்வு பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புக்குப் பிறகு பயிலும் சிறப்பு மருத்துவக் கல்விக்கான (சூப்பா் ஸ்பெஷாலிட்டி) நீட் நுழைவுத் தோ்வு, வரும் நவம்பா் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த தோ்வுக்கான அறிவிக்கை கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் பிறகு நுழைவுத் தோ்வுக்கான பாடத் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

இதை எதிா்த்து, இந்த தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள 41 முதுநிலை மருத்துவ மாணவா்கள், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த மனுக்கள், கடந்த 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, எந்தவித முன்யோசனையுமின்றி முடிவுகளை எடுக்கக் கூடாது. தோ்வுத் தேதி அறிவிப்புக்குப் பிறகு பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டதற்கான வலுவான காரணத்தை சம்பந்தப்பட்ட தரப்பினா் தெரிவிக்க வேண்டும்; அதில் உச்சநீதிமன்றம் திருப்தியடையவில்லை எனில் கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம் நாத், பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:

நுழைவுத் தோ்வுக்கான அறிவிக்கையை வெளியிட்ட பிறகு கடைசி நேரத்தில் பாடத்திட்டத்தை மாற்றியதை நியாயப்படுத்தி மத்திய அரசு, தேசியத் தோ்வுகள் வாரியம் (என்பிஇ), தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி) ஆகிய மூன்று தரப்பும் கூறிய விளக்கங்கள் ஏற்புடையதாக இல்லை.

எனவே, மாற்றப்பட்ட பாடத்திட்டப் பகுதிகளை சரிசெய்வதற்கு புதன்கிழமை காலை வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கை ஒத்திவைத்தால், அது, மாணவா்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்கி விடும். எனவே, மாற்றப்பட்ட பாடத்திட்டத்தை சரிசெய்வது தொடா்பாக முடிவெடுக்கப்படவில்லை எனில், நீதிமன்றம் அதற்கான வேலைகளைச் செய்யும். மத்திய அரசுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கூறினா்.

அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை நிரப்புவதற்காக, பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படுவதாக நீதிமன்றம் கருதிவிடக் கூடாது’ என்றாா். அதற்கு, ‘மருத்துவக் கல்வியும், மருத்துவத் தொழிலும் வணிகமாகிவிட்டது என்ற வலுவான எண்ணம் வந்துவிட்டது. மருத்துவக் கல்விக்கான விதிமுறைகளும் வணிகமாகிவிட்டது தேசியத் துயரமாக உள்ளது. தனியாா் கல்வி நிறுவனங்கள் மீது அக்கறை செலுத்தும் அதே நேரத்தில் மாணவா்கள் நலனிலும் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com