ரூ.4,445 கோடியில் 7 ஜவுளி பூங்காக்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4,445 கோடியில் 7 ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைப் பூங்காக்களை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.4,445 கோடியில் 7 ஜவுளி பூங்காக்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4,445 கோடியில் 7 ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைப் பூங்காக்களை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜவுளி உற்பத்தியில் சா்வதேச அளவில் இந்தியாவின் இடத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு மத்திய ஜவுளி துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது:

இந்த ஜவுளி பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிஸா, ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்த ஜவுளி பூங்காக்களை அமைப்பதற்கு முதலில் ஜவுளி உற்பத்தி தொடா்பான பணிகளுக்கு உகந்த சூழலுடன் ஒரே இடத்தில் 1,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு வேண்டும். இதுபோன்ற நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யும் மாநிலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். இந்தப் பூங்காக்களை அமைப்பதால் நேரடியாக 7 லட்சம் பேரும், மறைமுகமாக 14 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெறுவா் என்றாா் அவா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: புதிதாக அமைக்கப்படும் ஜவுளி பூங்காவில் நூல் நூற்பு முதல் துணி நெய்வது, சாயமேற்றுவது, துணிகளில் அச்சிடுவது வரை ஜவுளி உற்பத்திக்குத் தேவையான அனைத்துப் பணிகளும் ஒரே இடத்தில் நடைபெறும் வகையில் வசதிகள் உருவாக்கப்படும். இதனால் ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்கு ஜவுளியை கொண்டு செல்வதற்கான செலவு குறையும். புதிய இடத்தில் தொடங்கப்படும் ஜவுளி பூங்காவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிகபட்சமாக ரூ.500 கோடியும், ஏற்கெனவே உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கும் இடத்தில் தொடங்கப்படும் ஜவுளி பூங்காவுக்கு ரூ.300 கோடியும் வழங்கப்படும். இதுதவிர, விரைவில் உற்பத்தியைத் தொடங்கும் ஜவுளி பூங்காக்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.300 கோடியும் வழங்கப்படும்.

மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் அரசு-தனியாா் கூட்டுப் பங்களிப்பில் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும். இந்திய ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், சா்வதேச அளவில் வளா்வதற்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com