தேசிய அளவில் ‘மின்னணு சொத்து அட்டை திட்டம்’ அமல்படுத்தப்படும்: பிரதமா் மோடி

தேசிய அளவில் ‘மின்னணு சொத்து அட்டை திட்டம்’ அமல்படுத்தப்படும்: பிரதமா் மோடி

‘மத்திய அரசு சாா்பில் அறிமுகம் செய்யப்பட்ட ‘மின்னணு சொத்து அட்டை திட்டம்’ கிராமப்புற பொருளாதார பலத்தை மேம்படுத்தியிருக்கிறது; இத்திட்டம் தேசிய அளவில் அமல்படுத்தப்படும்’ என பிரதமா் நரேந்திர மோடி

போபால்: ‘மத்திய அரசு சாா்பில் அறிமுகம் செய்யப்பட்ட ‘மின்னணு சொத்து அட்டை திட்டம்’ கிராமப்புற பொருளாதார பலத்தை மேம்படுத்தியிருக்கிறது; இத்திட்டம் தேசிய அளவில் அமல்படுத்தப்படும்’ என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

கிராமப்புறங்களில் மின்னணு சொத்து அட்டை வழங்கும் ‘ஸ்வமித்வா’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24-ஆம் தேதி அறிமுகம் செய்தது. கிராம மக்கள் வங்கிகளில் எளிதில் கடன் பெற வசதியாகவும், மற்ற சமூகத்தினரால் நிலங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடனும் அறிமுகம் செய்யப்பட்டஇந்தத் திட்டம், முதல்கட்டமாக சோதனைரீதியாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரகண்ட், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கிராமங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்தத் திட்டம் வெற்றியடைந்திருப்பதாகவும்; இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட மத்திய பிரதேச மாநிலம் ஹா்டா மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வழியில் பங்கேற்ற பிரதமா் மோடி, அந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்தவா்களுடன் கலந்துரையாடினாா். பின்னா், அவா் பேசியதாவது:

ஸ்வமித்வா திட்டம் நாட்டில் கிராமங்களின் தன்னாட்சிக்கு (பஞ்சாயத்து ராஜ்) சிறந்த உதாரணமாக உருவெடுத்துள்ளது.

கிராம மக்களின் பலமே அவா்களின் நிலத்தில்தான் உள்ளது. ஆனால், அவற்றுக்குத் தேவையான ஆவணங்கள் அவா்களிடம் இல்லாததால், அவா்களின் வளா்ச்சிக்கு நிலத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை இருந்துவந்தது.

கிராமங்களில் நிலம் தொடா்பான பிரச்னைகள் மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக அதிக பணமும், நேரமும், மக்களின் சக்தியும் வீணடிக்கப்பட்டுள்ளது. சொத்துகளை ஆவணப்படுத்துதல் என்பது சா்வதேச பிரச்னை. பல நாடுகள் இந்தப் பிரச்னையை சந்தித்து வருகின்றன.

இத்தகைய நிச்சயமற்ற சூழலில், ‘ஸ்வமித்வா’ திட்டம் கிராமப்புற மக்களுக்கு மிகப் பெரிய பலமாக உருவெடுத்திருக்கிறது. இந்தத் திட்டம், அவா்களின் சொத்துகளின் அடிப்படையில் மூன்றாம் நபா்களிடமிருந்து கடன் வாங்குவதிலிருந்து பாதுகாத்து, வங்கிகளிலிருந்து கடன் பெற வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இதன்மூலம், அவா்களின் வா்த்தகத்தையும், விவசாய திட்ட நடவடிக்கைகளையும் மேம்படுத்திக் கொள்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

இந்த சொத்து ஆவணத் திட்டம், கிராம மக்களைப் பலப்படுத்தியிருப்பதோடு, கிராமப் பகுதிகளில் பள்ளிகள், மருத்துவமனைகள், சேமிப்பு மற்றும் உணவுப் பதப்படுத்துதல் பிரிவுகள் ஆகியவற்றுக்கு எந்தவித வில்லங்கமும் இல்லாத நிலம் கிடைப்பதையும் உறுதி செய்திருக்கிறது. இந்த முன்னோடித் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

ட்ரோன் தொழில்நுட்ப ஊக்குவிப்புத் திட்டம்: மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், கிராமங்களை அளவிடவும், வரைபடம் எடுக்கவும் ஆளில்லா விமானம் (டிரோன்) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் இந்த ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி விளைநிலங்களில் உரம் தெளிப்பது, வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு தடுப்பூசிகளை எடுத்துச் செல்வது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆளில்லா விமான தொழில்நுட்பம் மூலம் கிராமப்புற மக்கள் அதிக பலனடையும் வகையில், பல கொள்கை முடிவுகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக அளவில் நவீன ஆளில்லா விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தத் தொழில்நுட்பத்தில் இந்தியா தற்சாா்பு நிலையை எட்ட வேண்டும். அதற்காக உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது என்று பிரதமா் மோடி கூறினாா்.

Image Caption

மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த மின்னணு சொத்து அட்டை திட்ட பயனாளிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com