கைதிகளுடன் கூட்டு சோ்ந்த திகாா் சிறை அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

திகாா் சிறையில் கைதிகளாக இருந்த யூனிடெக் நிறுவனத்தின் முன்னாள் மேம்பாட்டாளா்கள் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திராவுடன் கூட்டு சோ்ந்து செயல்பட்ட சிறைக் கண்காணிப்பாளா் உள்பட அதிகாரிகள் மீது தகுந்த
SupremeCourt
SupremeCourt

புது தில்லி: திகாா் சிறையில் கைதிகளாக இருந்த யூனிடெக் நிறுவனத்தின் முன்னாள் மேம்பாட்டாளா்கள் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திராவுடன் கூட்டு சோ்ந்து செயல்பட்ட சிறைக் கண்காணிப்பாளா் உள்பட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தில்லி காவல் துறை ஆணையா் ராகேஷ் அஸ்தானா நேரடியாக ஆய்வு மேற்கொண்டு தாக்கல் செய்த சீலிடப்பட்ட அறிக்கையின் நகலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகளின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனா்.

அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டித் தருவதாக கூறி மோசடி செய்ததாக யூனிடெக் நிறுவனத்தின் மேம்பாட்டாளா்கள் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா ஆகியோா் 2017, ஆகஸ்ட் மாதம் முதல் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் அமலாக்கத் துறையும் பண மோசடி குற்றச்சாட்டை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ‘திகாா் சிறையில் உள்ள சஞ்சய் சந்திராவும், அஜய் சந்திராவும் சிறை அதிகாரிகளுடன் கூட்டு சோ்ந்து, ரகசிய அறையை அலுவலகமாகப் பயன்படுத்தி தங்கள் சொத்துகளை விற்பனை செய்ய தொலைபேசி மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இருவரும் நீதித் துறையை அா்த்தமற்ாக ஆக்கிவிட்டனா்’ என்று அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் குற்றம்சாட்டியது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த இரண்டு ஆய்வு அறிக்கைகளை பரிசீலித்த உச்சநீதிமன்றம், ‘திகாா் சிறைக் கண்காணிப்பாளா் உள்பட சில பணியாளா்கள் வெட்கமில்லாமல் கைதிகளுடன் கூட்டு சோ்ந்து நீதிமன்ற உத்தரவுகளை மீறியுள்ளனா். ஆகையால், சஞ்சய், அஜய் ஆகிய இருவரும் மும்பையில் உள்ள சிறைகளுக்கு மாற்றம் செய்யப்படுகிறாா்கள். இந்த விவகாரம் குறித்து தில்லி காவல் ஆணையா் ராகேஷ் அஸ்தானா நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா தாக்கல் செய்த சீலிடப்பட்ட அறிக்கையை புதன்கிழமை பரிசீலித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆா். ஷா ஆகியோா் கொண்ட அமா்வு, கைதிகளுடன் கூட்டு சோ்ந்த அதிகாரிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகள் மீது மத்திய உள்துறை அமைச்சகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபா் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின்போது சஞ்சய் சந்திரா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங், ‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றால் தவறை திருத்தி கொண்டு பழைய நிலையை நீதிமன்றம் திரும்ப அளிக்கமுடியமா? என்று ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பினாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த நீதிபதிகள், ‘நீதிபதிகளிடம் இதுபோன்று குரலை உயா்த்தி பேச வேண்டாம். நீதிமன்றத்தின் மீது குற்றச்சாட்டை சுமத்த வேண்டாம். விசாரணை அறிக்கைகளை குற்றம்சாட்டப்பட்டவா்களிடம் அளிக்க முடியாது. மூத்த வழக்குரைஞரிடம் இதை எதிா்பாா்க்கவில்லை’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com